நிலத்தை விற்பதாக கூறி ரூ.80 லட்சம் மோசடி * 4 பேர் மீது வழக்கு
சாத்துார்:விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம் பண்ணையில் நிலத்தை விற்பதாக கூறி ரூ.80 லட்சம் மோசடி செய்த தந்தை, மகன் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.ஏழாயிரம் பண்ணை மடத்துப்பட்டியைச் சேர்ந்தவர் சீனிவாசகம் 42. சென்னையில் வசித்து வரும் ஜான்யா பேஸ் என்பவருக்கு சொந்தமான இடம் துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ளது. கட்டடத்துடன் கூடிய அந்த இடத்திற்கு ரூ.ஒரு கோடி கிரையம் பேசி சீனிவாசகம் மடத்துப்பட்டியில் வைத்து ஜான்யா பேஸிடம் 3 தவணையாக ரூ.80 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால் ஜான்யாபேஸ், அவர் மகன் ஸ்டான்லிமாஸ், இவர் மனைவி பொன்மலர், மருமகள் அனிதா ஆகியோர் சிவகாசியைச் சேர்ந்த வேறு ஒரு நபருக்கு இடத்தை விற்றதுடன், சீனிவாசகத்திடம் வாங்கிய பணத்திற்கு பதிலாக ரூ.ஒரு கோடி தருவதாக கூறி 3 காசோலை வழங்கினர்.சீனிவாசகம் வங்கியில் காசோலையை செலுத்திய போது அந்த காசோலைக்கு ஸ்டாப் பேமெண்ட் கொடுத்திருப்பது தெரியவந்தது. தமக்கு தர வேண்டிய ரூ.ஒரு கோடியை தராமலும் ஏமாற்றுவதுடன் பணத்தை திரும்ப கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்துள்ளார். 4 பேர் மீதும் ஏழாயிரம் பண்ணை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.