விருதுநகர் அரசு மருத்துவமனையில் தனியார் ஆம்புலன்ஸ் ‛கார்டு விநியோகம்
விருதுநகர், : விருதுநகர் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்களின் உடன் இருப்பவர்களிடம் தனியார் ஆம்புலன்ஸ் பணியாளர்கள் விசிட்டிங் கார்டு' கொடுப்பது தொடர் கதையாக மாறியுள்ளது.விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்வது நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் தனியார் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மேல்சிகிச்சைக்கு மதுரைக்கு அழைத்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால் அழையுங்கள் என விசிட்டிங் கார்டுகளை கொடுக்கின்றனர்.இவர்களை காலை நேரத்தில் பாதுகாப்பு பணியாளர்கள் தடுத்து நிறுத்துகின்றனர். ஆனால் இரவு நேரத்தில் சர்வ சாதாரணமாக அவசர சிகிச்சை பிரிவின் முகப்பில் கார்டு விநியோகம் செய்கின்றனர்.இவர்களுக்கு மருத்துவமனைக்கு உள்ளே சிலர் உடந்தையாக செயல்படுகின்றனர். மேலும் உள்நோயாளிகளில் மேல் சிகிச்சை தேவைப்படுபவர்கள், இறக்கும் தருவாயில் இருப்பவர்கள் குறித்து முன்கூட்டியே தகவல் கொடுக்கப்படுகிறது.மருத்துவமனை நிர்வாகத்தினர் மேல் சிகிச்சை செல்பவர்கள், இறந்தவர்களுக்கு வேண்டிய வாகன வசதியை ஏற்படுத்தி கொடுக்கின்றனர். ஆனால் உடந்தையாக இருப்பவர்களால் நடக்கும் செயலை கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே அரசு மருத்துவமனையில் விசிட்டிங் கார்டு கொடுப்பவர்கள், உடந்தையாக இருப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.