வீதியின் நடுவே மின்கம்பங்கள்: ஆக்கிரமிப்பில் ரோடு
காரியாபட்டி : வீதியின் நடுவில் உள்ள மின்கம்பங்களால் அச்சம், மண் ரோடாக இருக்கும் சிலோன் காலனியில் நடமாட சிரமப்படும் மக்கள், ஆக்கிரமிப்பில் சிக்கி தவிக்கும் ஒன்றிய அலுவலக ரோடு என காரியாபட்டி பேரூராட்சி மக்கள் சிரமத்தில் உள்ளனர்.காரியாபட்டி பேரூராட்சியில் பெரும்பாலான வீதிகளின் நடுவில் மின் கம்பங்கள் உள்ளன. வாகனங்கள் சென்று வருவதில் பெரிதும் சிரமம் ஏற்படுகிறது. இரவு நேரங்களில் டூவீலரில் வருபவர்கள் மின்கம்பத்தில் மோதி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. சிலோன் காலனியில் வீதிகள் அனைத்தும் மண் ரோடாக இருப்பதால், மழை நேரங்களில் ஆட்கள் நடமாட முடியவில்லை. வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் செல்ல வாறுகால் வசதி கிடையாது.சேரும் சகதியுமாக இருப்பதால் கொசு உற்பத்தியாகி பகலிலே கடிக்கும் நிலை இருந்து வருகிறது. வீதிகளில் செடிகள் முளைத்து புதர் மண்டி கிடப்பதால் விஷ பூச்சிகளின் நடமாட்டம் இருந்து வருகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். ஒன்றிய அலுவலக ரோட்டில் ஆக்கிரமிப்புகளால் அதிகாரிகளின் வாகனங்கள் சென்றுவர முடியவில்லை. டூவீலர்களை நிறுத்தி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர். விபத்து அச்சம்
பழனிச்சாமி, தனியார் ஊழியர்: பெரும்பாலான வீதிகளின் நடுவில் மின் கம்பங்கள் உள்ளன. இடையூறாக இருப்பதால் வாகனங்கள் சென்றுவர முடியவில்லை. ஆம்புலன்ஸ் கூட வர முடியாத நிலை உள்ளது. டூவீலர்களில் வருபவர்கள் மின் கம்பத்தில் மோதி விபத்து ஏற்படும் அச்சம் உள்ளது. மின் கம்பங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்திற்கு இடையூறு இன்றி வீதியின் ஓரத்தில் மின் கம்பங்களை நட நடவடிக்கை எடுக்க வேண்டும். வாறுகால் வசதி இல்லை
மணிகண்டன், தனியார் ஊழியர்: சிலோன் காலனியில் வீதிகள் அனைத்தும் மண் ரோடாக உள்ளன. வாறுகால் வசதி இல்லாததால் கழிவு நீர் வீதியில் தேங்குகிறது. சேரும் சகதியமாக இருப்பதால் ஆட்கள் நடமாட முடியவில்லை. கொசு உற்பத்தியால் அவதிக்குள்ளாகி வருகிறோம். புதர் மண்டி கிடப்பதால் விஷ பூச்சிகளின் நடமாட்டம் உள்ளது. பேவர் பிளாக் கற்கள் பதித்து வாறுகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். ரோட்டில் டூவீலர்கள்
பாஸ்கரன், விவசாயி: ஒன்றிய அலுவலக ரோட்டில் டூவீலர்களை நிறுத்திவிட்டு வெளியூர்களுக்கு செல்கின்றனர். இரவு வரை ஸ்டாண்ட் போல் வாகனங்கள் நிற்கின்றன. கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் டூவீலர்களை ரோட்டில் நிறுத்தி பொருட்கள் வாங்குகின்றன. கடைக்காரர்கள் பொருட்களை ரோட்டில் வைத்து இடையூறு ஏற்படுத்துகின்றனர். அதிகாரிகளின் வாகனங்கள் செல்ல பெரிதும் சிரமம் ஏற்படுகிறது. டூவீலர்கள் நிறுத்துவதை தடுக்க போலீசார் கண்காணிக்க வேண்டும். போக்குவரத்திற்கு இடையூறு இன்றி இருக்க ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.