விளை நிலத்தில் ரோடு அமைக்க எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் கைது
காரியாபட்டி: விளை நிலத்தில் ரோடு அமைக்க அதிகாரிகள் முயற்சித்ததால் விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். காரியாபட்டி அரசகுளத்தில் 50 ஏக்கர் பரப்பளவில் 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். அந்த நிலத்தில் வண்டிப்பாதை இருப்பதாக கூறி மணியம்பிள்ளை கிராமத்திற்கு ரோடு அமைக்க முயற்சித்து வருகின்றனர். இப்பிரச்னை நீண்ட நாட்களாக நடந்து வருகிறது. தாசில்தார் மாரீஸ்வரன், இன்ஸ்பெக்டர் விஜயகாண்டீபன் தலைமையில் வருவாய் துறை அதிகாரிகள், போலீசார் 30க்கும் மேற்பட்டவர்கள் சென்று ரோடு அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.மாரீஸ்வரன், தாசில்தார், காரியாபட்டி: அரசகுளத்தில் மணியபிள்ளை கிராமத்திற்கு வண்டி பாதை இருந்தது. இதை மறைத்து சிலர் உழவடை செய்து வந்தனர். அதற்குப்பின் அக்கிராமத்தினர் பாதை கேட்டு கோரிக்கை விடுத்தனர். பிரச்னை இருந்ததால் ரோடு அமைக்க முடியவில்லை. உயர் நீதி மன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டு, தீர்ப்புக்கு பின் ரோடு அமைக்கப்பட்டது. இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.உயர் நீதிமன்றம் மதுரை கிளை தெரிவித்த தீர்ப்பை கடைப்பிடிக்க அறிவுறுத்தியதுடன், எதிர்ப்பாளர்கள் மனுவை தள்ளுபடி செய்தது. அதன்படி, எதிர்ப்பாளர்களுக்கு முறைப்படி அறிவிப்பு கொடுத்து, இடத்தை அளந்து, கையகப்படுத்தி கல் நட்டு, ரோடு அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு சிலர் மட்டும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். விவசாயம் எதுவும் செய்யவில்லை. தரிசு நிலமாகத்தான் உள்ளது. கோர்ட் உத்தரவுபடி ரோடு அமைக்கப்பட்டு வருகிறது.