நரிக்குடியில் தொடர் திருட்டால் அச்சம்
நரிக்கு: நரிக்குடி பகுதியில் அடிக்கடி திருட்டு சம்பவம் நடந்து வருவதால் மக்கள் அச்சப்படுவதுடன், போலீசார் தீவிர கண்காணிப்பை அதிகரிக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.நரிக்குடி பகுதியை ஒட்டியே ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மாவட்ட எல்லை உள்ளது. மற்ற பகுதிகளில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு விருதுநகர் மாவட்ட எல்லைக்குள் எளிதில் புகுந்து விடுகின்றனர். தலைமறைவாக இருக்கும் சமயத்தில், கையில் பணம் இருப்பு காலியானவுடன், பணத் தேவையை பூர்த்தி செய்ய, தனியாக செல்பவர்களை குறி வைத்து தாக்கி வழிப்பறி செய்கின்றனர்.சில சமயங்களில் ஊர்களுக்குள் சுற்றித் திரியும் போது நோட்டமிட்டு ஆட்கள் இல்லாத வீடுகளில் புகுந்து திருடுகின்றனர். இரவு நேரங்களில் டாஸ்மாக் கடை ஊழியர்களை குறிவைத்து தாக்கி கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அடிக்கடி அப்பகுதியில் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவதால் அச்சத்தில் உள்ளனர். போலீசார் கண்காணிப்பில் இருந்தாலும் கண்ணில் மண்ணைத் தூவி, திருட்டு சம்பவத்தில் ஈடுபடுகின்றனர். போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி திருட்டுகள் நடக்காமல் பார்க்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.