மானிய விலையில் உரம், பூச்சிக்கொல்லிகள்
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை பகுதிகளில் மல்லிகை பூ விவசாயிகளுக்கு மானிய விலையில் உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் வழங்க கோரிக்கை வைத்துள்ளனர்.அருப்புக்கோட்டையை சுற்றியுள்ள புலியூரான், செம்பட்டி, தொட்டியங்குளம், கோவிலாங்குளம், இலங்கிபட்டி, மடத்து பட்டி, தமிழ்பாடி உட்பட பகுதிகளில் பாரம்பரியமாக மல்லிகை பூ விவசாயம் செய்து வருகின்றனர். இந்தப் பகுதி மல்லிகை பூவிற்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு இருந்தும் விவசாயிகளுக்கு உரிய லாபம் கிடைக்காததால் பல பகுதிகளில் விவசாயம் குறைந்து வருகிறது ஒரு ஆண்டுக்கு ஆறு முறை அறுவடை செய்யலாம் ஆனால் இதற்குரிய செலவுகள் அதிகமாக உள்ளது.உரமிடுதல், பூச்சி கொல்லி மருந்து அடித்தல் உட்பட பணிகளை செய்கிற போது செலவுகள் அதிகமாக ஆகிறது. ஏக்கருக்கு 3 லட்சம் வரை செலவாகிறது. இருப்பினும் விவசாயிகள் விடாமல் மல்லிகைப்பூ சாகுபடி செய்து வருகின்றனர். அரசு மல்லிகை பூ விவசாயத்தை பாதுகாப்பதுடன் மானிய விலையில் உரங்கள் பூச்சிக்கொல்லி மருந்துகளை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.இதுகுறித்து காவிரி, வைகை, குண்டாறு பாசன விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ராம்பாண்டியன்: மல்லிகைப்பூ விவசாயத்திற்கு அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும். மானிய விலையில் பூச்சிக்கொல்லி, மருந்துகள், உரம் கிடைக்க வழி செய்ய வேண்டும். இதற்கென தனியாக வங்கிகள் அமைத்து உரிய முறையில் கடன் உதவி செய்ய வேண்டும்.மதுரை, அருப்புக்கோட்டை, வளையங்குளம், காரியாபட்டி, திருச்சுழி பகுதிகள் மிதமான வெப்பம் இருக்கக்கூடிய பகுதிகளாகவும், வளம் கூடிய மண்ணும் இருப்பதால், மல்லிகை பூ விவசாயம் செழிப்பாக வருகிறது. மல்லிகை பூ விவசாயத்தை உரிய முறையில் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.