சிவப்பு எச்சரிக்கை இன்றி பறக்கும் வாகனங்கள்
விருதுநகர் : விருதுநகர் அருகே ஆர்.ஆர்.நகரில் இருந்து ஓ.கோவிலபட்டி செல்லும் ரோட்டில் சிவப்பு எச்சரிக்கை இன்றி செல்லும் சரக்கு வாகனங்களால் பின்னால் வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.ஆர்.ஆர்., நகரில் இருந்து ஓ.கோவில்பட்டி செல்லும் ரோட்டில் நாளுக்கு நாள் கனரக வாகனங்களின் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. இப்பகுதியைச் சுற்றி அதிகளவில் பட்டாசு தயாரிப்பு ஆலைகள் செயல்படுவதால் தினமும் டூவீலரில் தொழிலாளர்கள் இவ்வழியாக சென்று வருகின்றனர்.ஆனால் ரோட்டில் செல்லும் சரக்கு வாகனங்கள் எவ்வித சிவப்பு எச்சரிக்கை இன்றியும் லோடுகளை ஏற்றிச் செல்கின்றன. இந்த லோடுகளில் இருந்து செங்கல், கற்கள், கம்புகள் ஆகியவை சில நேரங்களில் பின்னால் வரும் டூவீலர், ஆட்டோ, கார் ஆகிய வாகனங்களின் மீது விழுந்து விபத்துக்களை ஏற்படுத்துகின்றன. மேலும் ஊரகப்பகுதிகளில் போலீசாரும் எவ்வித வாகன சோதனைகளும் செய்யாததால் சர்வ சாதரணமாக லோடுகளுடன் எவ்வித எச்சரிக்கைகள் இன்றி வாகனங்களில் செல்கின்றனர்.இது போன்று வாகனங்களை ஓட்டுபவர்கள் போலீசாரை கண்டதும் வாகனத்தை குறுக்கு வழியில் திருப்பி விடுகின்றனர். இவர்களை போலீசார் கண்டறிவதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே சரக்கு வாகனங்களில் சிவப்பு எச்சரிக்கை இன்றி செல்லும் வாகனங்களை கண்காணித்து விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.