| ADDED : ஜூலை 16, 2024 05:07 AM
வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு தாலுகாவில் கோடைகால நெல் சாகுபடி முடிந்துள்ள நிலையில் வயல்களை செம்மைபடுத்தவும், இயற்கை உரத்திற்காகவும் தங்கள் வயல்களில் ஆடு, மாடு கிடைகள் அமைக்க விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.விருதுநகர் மாவட்டத்தின் மேற்குபகுதியான வத்திராயிருப்பு தாலுகாவில் கான்சாபுரம், அத்தி கோயில், கூமாபட்டி, நெடுங்குளம், சேது நாராயணபுரம், வ.புதுப்பட்டி, தம்பிபட்டி, மகாராஜபுரம், கோட்டையூர் உட்பட பல்வேறு கிராமங்களில் பல ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி ஆண்டாண்டு காலமாக சிறப்புடன் நடந்து வருகிறது.ஆண்டுதோறும் மழையை நம்பியும், அணைகள் , கண்மாய்கள், கிணறுகள் உள்ள தண்ணீரை நம்பியும் நெல் பயிரிடுதலில் ஏராளமான விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த முறை அதிகளவில் நெல் விளைச்சல் ஏற்பட்டிருந்ததால் வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர், மம்சாபுரம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு, அரசின் மூலம் நேரடி கொள்முதல் செய்யப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.தற்போது கோடைகால நெல் சாகுபடி முடிந்துள்ள நிலையில் எதிர்வரும் வட கிழக்கு பருவமழையை நம்பி, காலமுறை நெல் சாகுபடி செய்ய வத்திராயிருப்பு தாலுகா விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.இதற்காக தங்கள் வயல்களை செம்மை படுத்தவும், இயற்கை உரமாக ஆடு, மாடுகளின் எச்சங்களை பயன்படுத்தவும், வயல்களில் கிடைகள் அமைப்பதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.