உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அரசு மருத்துவமனை கட்டட பராமரிப்பு நிதி பொதுப்பணித்துறை சுணக்கம்

அரசு மருத்துவமனை கட்டட பராமரிப்பு நிதி பொதுப்பணித்துறை சுணக்கம்

விருதுநகர : விருதுநகர் அரசு மருத்துவமனை கட்டடத்திற்கான பராமரிப்பு நிதி வழங்குவதில் பொதுப்பணித்துறை சுணக்கம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவனை 2022 ஜன 12ல் திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. இதையடுத்து அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இந்நிலையில் செயல்பாட்டிற்கு வந்த ஓராண்டிற்குள் அடிதளத்தின் பார்க்கிங் பகுதியில் கூரையில் நீருற்று ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் கூரை சுவர்களில் துருப்பிடித்தது போல காணப்படுகிறது. இங்கிருந்து முதல் தளத்திற்கு செல்லும் படிக்கட்டு சுவர்களில் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுகிறது.மேலும் முதல் தளத்தில் மன அமைதி பூங்கா இருக்கும் இடத்தில் இருந்து கட்டடத்தை பார்க்கும் போது வெள்ளை நிற சுவர்கள் பச்சை நிறத்தில் பாசி படர்ந்த நிலையில் காணப்படுகிறது. அநேக இடங்களில் குழாய் கசிவால் நீருற்று ஏற்பட்டுள்ளது. மேலும் சுவர்களின் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளது.ஆறு மாடிகளை கொண்ட கட்டடத்தில் கழிவறைகளில் தண்ணீர் குழாய் திறப்பான்களில் அடிக்கடி பழுது ஏற்பட்டு மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னைகளை சரி செய்ய கடந்த சில வாரங்களுக்கு முன்பு பணியாளர்கள் ஈடுபட்டனர். ஆனால் பெயரளவில் கண் துடைப்பிற்கான பணிகள் மட்டுமே நடந்துள்ளது.மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறியதாவது: அரசு மருத்துவமனையில் கட்டடங்களை பராமரிக்க தேவையான நிதி கேட்டு பல முறை பொதுப்பணித்துறைக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் நிதியை தருவதில் தொடர்ந்து சுணக்கம் காட்டி வருகின்றனர். கட்டடத்தின் பராமரிப்பு பணிகளில் பொதுப்பணித்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !