தேவை ஹால்ட் ரயில்வே ஸ்டேஷன்கள்: மனசு வைக்குமா மதுரை கோட்ட நிர்வாகம்
ஸ்ரீவில்லிபுத்துார்:மதுரை ரயில்வே கோட்டத்தில் பல்வேறு ரயில் வழித்தடங்களில் 'ஹால்ட்' ரயில்வே ஸ்டேஷன்கள் ஏற்படுத்த தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.'ஹால்ட்' ரயில்வே ஸ்டேஷன் என்பது வழக்கமான ஸ்டேஷன்களில் இருந்து சில கி.மீ., துாரத்தில் பயணிகள் எளிதாக வந்து செல்ல உதவும் சிறிய ஸ்டேஷனாக இருக்கும். அங்கு ரயில்கள் ஒரு நிமிடம் நின்று செல்லும்.தற்போது மதுரை- - போடி வழித்தடத்தில் வடபழஞ்சியிலும், மதுரை - -கொல்லம் வழித்தடத்தில் எடப்பாளையம், சந்தனடாப் இடங்களிலும் ஹால்ட் ரயில்வே ஸ்டேஷன்கள் உள்ளது.மதுரை - -போடி பாதையில் தேனியில் எஸ்.பி அலுவலகம் எதிரில் ஒரு ஹால்ட் ரயில்வே ஸ்டேஷன் கட்டப்படுகிறது. விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. இந்த வழித்தடம் மீட்டர் கேஜ் பாதையாக இருந்தபோது நாகமலை மேற்கு, கருமாத்தூர், சிக்கம்பட்டியில் ஹால்ட் ரயில்வே ஸ்டேஷன் இருந்தது. இதனை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.மதுரை- - செங்கோட்டை வழித்தடத்தில் விருதுநகர் தமிழ்நாடு ஓட்டல் அருகே ஒரு ஹால்ட் ரயில்வே ஸ்டேஷன் ஏற்படுத்த வேண்டும். இதன்மூலம் தென்காசி, சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், சிவகாசி பகுதி மக்களும், அரசு ஊழியர்களும் கலெக்டர் அலுவலகத்திற்கு எளிதாக வந்து செல்வார்கள்.திருநெல்வேலி வழித்தடத்தில் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தின் அருகில் அமைந்துள்ள துலுக்கப்பட்டி ரயில்வே ஸ்டேஷனில் சில எக்ஸ்பிரஸ் ரயில்களும், ஈரோடு -செங்கோட்டை, திருச்செந்தூர்,- பாலக்காடு, நாகர்கோவில், -கோவை ரயில்களும், ஒரு நிமிடம் நின்று செல்ல ரயில்வே நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டும்.இதன் மூலம் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து விருதுநகர் கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் அரசு ஊழியர்களும், மக்களும் பயனடைவார்கள்.பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு வழித்தடங்களில் ஹால்ட் ரயில்வே ஸ்டேஷன்கள் அமைக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.