பஸ் வசதியின்றி 2 கி.மீ., நடந்து பள்ளி செல்லும் கீழகுருணைகுளம் மாணவிகள்
திருச்சுழி: திருச்சுழி அருகே பஸ் வசதி இல்லாததால் 2 கி.மீ., துாரம் நடந்து கீழ குருணைக்குளம் மாணவிகள் பள்ளிக்குச் சென்று வருகின்றனர்.திருச்சுழி ஊராட்சியில் ஒன்றியத்தை சேர்ந்த ஆலடிபட்டி ஊராட்சிக்கு உட்பட்டது கீழ குருணைகுளம். இங்கு 1 முதல் 5 வகுப்பு வரை, படிக்க ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. 6 லிருந்து பிளஸ் 2 வரை, படிக்க இந்த ஊர் மாணவர்கள் 2 கி.மீ., தூரங்களில் உள்ள தமிழ்பாடி அரசு பள்ளிக்கும், கல்லூரணிக்கும் நடந்து செல்ல வேண்டியுள்ளது. பள்ளி மாணவர்கள் சென்று வர பள்ளி நேரத்திற்கு பஸ் வசதி இல்லை.காலையில் 7:30 மணிக்கு ஒரு அரசு டவுன் பஸ் மட்டும் ஒரு முறை ஊருக்கு வந்து செல்கிறது. இதனால் மாணவர்கள் நடந்தும் ஒரு சிலர் சைக்கிளில் சென்றும் படித்து வருகின்றனர். மழை காலமானால் நனைந்து கொண்டே செல்ல வேண்டி இருக்கிறது. கோடை காலத்தில் கொளுத்தும் வெயிலில் நடந்தது தான் பள்ளிக்குச் செல்கின்றனர். ஊருக்குள் மினி பஸ் வசதி இருந்தது. அதுவும் 1 ஆண்டாக வரவில்லை. இவ்வூர் மக்கள் பஸ் வசதி கேட்டு பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை.மாணவர்களின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் பள்ளி செல்லும் நேரத்தில் அரசு பஸ்கள் சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர் விரும்புகின்றனர்.