கண்மாய் காப்போம் . . .
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் பாப்பாங்குளம் கண்மாயின் மழைநீர் வரத்து பகுதிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு பிளாட்டுகளாக மாறியதால் தண்ணீர் வரத்து குறைந்து விவசாயம் கேள்விக்குறியாக மாறி உள்ளது. அருப்புக்கோட்டை பாப்பாங்குளம் கண்மாய்சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த கண்மாயின் நீர் பிடிப்பு பகுதிகள் நகராட்சி பகுதியிலும், கண்மாயின் கரை பகுதிகள் செம்பட்டி ஊராட்சியின் கட்டுப்பாட்டிலும் உள்ளது. கண்மாய்க்கு திருச்சுழி ரோட்டில் உள்ள தீயணைப்பு நிலையத்திற்கு எதிரே உள்ள கல் மண்டபம் வழியாகச் செல்லும் ஓடையிலிருந்தும், எஸ்.பி.கே., கல்லூரி சாலை வழியாக வரும் ஓடையிலிருந்தும், நாடார் மயான ரோட்டின் வழியாக வரும் ஓடையிலிருந்தும் மழைநீர் கண்மாய்க்கு வந்து சேரும். பல ஆண்டுகளுக்கு முன்பு மதுரை தூத்துக்குடி நான்கு வழி சாலை அமைக்கப்பட்டதால் ஓடைகள் அழிந்தன. கண்மாயின் நீர் பிடிப்பு பகுதிகள் தற்போது சிறிது சிறிதாக பிளாட்டுகளாக மாறி வருகிறது. இதனால் கண்மாய்க்கு மழை நீர் வரத்து குறைந்து 15 ஆண்டுகளுக்கு மேலாக கண்மாய் வறண்டு கிடக்கிறது. 2 இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கண்மாயை நம்பி பாசனம் செய்யும் விவசாயிகள் தங்கள் சொந்த செலவில் கண்மாயை முடிந்த வரை பராமரிப்பு செய்ததால் மழை நீரை ஓரளவுக்கு சேமிக்க முடிந்தது. கண்மாயின் கரைகள், சீமை கருவேல மரங்கள், கண்மாயின் இரண்டு மதகுகள் ஆகியவற்றை சரி செய்து பராமரிப்பு பணிகள் செய்ய வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் அசோக்குமார், விவசாயி: இந்த கண்மாயை நம்பி தான் நாங்கள் விவசாயம் செய்து வந்தோம். பல ஆண்டுகாலமாக கண்மாய் வறண்டு கிடக்கிறது. கண்மாய்க்கு மழை நீர் ஓடைகள், நீர்ப்பிடிப்பு பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இவற்றை அகற்றி மழை நீர் வருவதற்குரிய வழிகளை அரசு செய்ய வேண்டும். இதே நிலை நீடித்தால் கண்மாய் இருப்பது தெரியாமல் போய்விடும் விவசாயமும் கேள்விக்குறியாக மாறிவிடும். பராமரிப்பு அவசியம் கண்ணன், விவசாயி: கண்மாயில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும். கண்மாயின் கரைகளை உயர்த்த வேண்டும். பல ஆண்டுகளாக கண்மாய் பராமரிப்பு இன்றி உள்ளதால் மழை நீர் வருவது தடைபட்டுள்ளது. ஓடைகளை சரி செய்ய வேண்டும். மதகுகள் சேதம் அன்னமுத்து, விவசாயி: பாப்பாங்குளம் கண்மாயின் 2 மதகுகள், ஷட்டர்கள் பழுதடைந்து பல ஆண்டுகளாக ஆகி விட்டது. இவற்றை சரி செய்ய வேண்டும். கண்மாயின் மறுகால் ஓடை சீரமைக்கப்பட வேண்டும். தற்போது ஓடை வாகனங்கள் வந்து செல்லும் பாதையாக மாறிவிட்டது. கண்மாயை பராமரிப்பு செய்து விவசாயிகளின் நலன் காக்கப்பட வேண்டும்.