கட்டுபடியாகாத நிலையில் மினி பஸ் கட்டணங்கள்
ஸ்ரீவில்லிபுத்துார்,:தமிழகத்தில் கட்டணம் கட்டுப்படியாகாத நிலையில் இருப்பதால் மினி பஸ்கள் இயக்க உரிமையாளர்கள் தயங்கி வருகின்றனர். தமிழகத்தில் கிராமப்புறங்களுக்கு போக்குவரத்து வசதி எளிதாக கிடைக்கும் வகையில் 1997ல் மினி பஸ் திட்டத்தை அப்போதைய முதல்வர் கருணாநிதி செயல்படுத்தினார். துவக்கத்தில் நல்ல வருவாய் இருந்த நிலையில் ஏராளமானோர் இயக்க முன் வந்தனர். 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மினிபஸ்கள் இயங்கி வந்தன.ஆனால், டூவீலர்கள்,ஷேர் ஆட்டோக்கள் அதிகரிப்பால் மினிபஸ்களுக்கு பயணிகள் வருகை குறைந்தது. மேலும் மகளிர் இலவச பயணத்திட்டத்தால் வருவாயில் பெரும் சரிவு ஏற்பட்டது. பல மினி பஸ்கள் நிறுத்தப்பட்டு விட்டன. சில இடங்களில் மட்டும் மினி பஸ்கள் இயங்குகின்றன. தற்போது தமிழகத்தில் புதிய மினிபஸ்கள் இயக்க 1250 வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மே 1ல் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரவுள்ள நிலையில் இதுவரை 278 விண்ணப்பங்கள் மட்டுமே வந்துள்ளன. கட்டணமாக முதல் 4 கி.மீ தூரத்திற்கு ரூ.4, 6 கி.மீக்கு ரூ.5, 8 கி.மீ.க்கு ரூ.6, 10 கி.மீ.க்கு ரூ.7, 12 கி.மீ.க்கு ரூ.8, 14 கி.மீ.க்கு ரூ.9, 20 கி.மீ.க்கு ரூ.10 என அறிவிக்கப்பட்டுள்ளது. இது கட்டுப்படியாகாத கட்டணம் என உரிமையாளர்கள் கூறுகின்றனர். தற்போதே மினிபஸ்களில் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.10 வசூலிக்கப்படுகிறது. இதுவே கட்டுபடியாகவில்லை என்கின்றனர் மினிபஸ் உரிமையாளர்கள். இத்திட்டம் துவங்கிய 1997ல் ஒரு லிட்டர் டீசல் ரூ.11 ஆக இருந்தது. தற்போது ரூ. 96. டயர் உள்ளிட்ட உதிரி பாகங்கள், பராமரிப்பு செலவு, டிரைவர் கண்டக்டர் சம்பளம் பல மடங்கு உயர்ந்துள்ளன. எனவே அரசு அறிவித்துள்ள கட்டணத்தில் பஸ் இயக்குவது சாத்தியமில்லாதது, சரியான கட்டணம், சரியான வழித்தடங்களை கண்டறிந்து போதுமான வருவாய் கிடைக்கும் வகையிலும், நடைமுறை சிக்கல்களை சரி செய்தும் அறிவித்தால் மட்டுமே மினி பஸ் அறிவிப்பு பலன்தரும் என உரிமையாளர்கள் கூறினர்.