பட்டாசு தொழிலை அழிக்கும் மறைமுக நடவடிக்கைகள் கூடாது எம்.பி., மாணிக்கம் தாகூர் கருத்து
விருதுநகர்: மத்திய அரசு எந்த வகையிலும் பட்டாசு தொழிலை அழிக்கும் மறைமுக நடவடிக்கைகளை எடுக்க கூடாது என விருதுநகரில் எம்.பி., மாணிக்கம் தாகூர் கூறினார்.அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் விருதுநகர் ரயில்வே ஸ்டேஷனில் ரூ.25 கோடியில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்னற. முதற்கட்ட பணிகளை எம்.பி., மாணிக்கம் தாகூர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். எம்.எல்.ஏ., சீனிவாசன், ரயில்வே முதன்மை திட்ட மேலாளர் ஹரிகுமார், வணிக மேலாளர் ரமேஷ் பங்கேற்றனர்.மாணிக்கம் தாகூர் கூறியதாவது: விருதுநகர் ரயில்வே ஸ்டேஷனில் முகப்பு பகுதி, வாகன காப்பகம், பார்சல் அலுவலகம் உள்ளிட்ட பணிகள் ரூ.10 கோடியில் நடந்து வருகிறது. செப்.ல் இரண்டாம் கட்ட பணிகள் துவங்கும். மேல் தளம், லிப்ட், நடைமேடை விரிவாக்கம் போன்ற வசதிகள் செய்யப்படும். முதற்கட்ட பணிகள் முடியும் தருவாயில் உள்ளன.பட்டாசுக்கான வெடிபொருள் சட்டம் கி.பி., 1800களில் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை மாற்றுவதற்காக கடந்த ஏப்ரலில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இது முதல்கட்ட ஆய்வில் உள்ளது.இச்சட்டம் தொடர்பாக பட்டாசு தொழிலாளர்கள், ஆலை உரிமையாளர்கள், விற்பனையாளர்கள் அழைத்து மத்திய அரசு பேச வேண்டும். இச்சட்டம் முழு வடிவம் பெறுவதற்கு முன் ஆலோசிக்க வேண்டும். எந்த வகையிலும் பட்டாசு தொழிலை அழிக்கும் மறைமுக நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க கூடாது, என்றார்.