விருதுநகர் அரசு மருத்துவமனையின் பாதுகாப்பு ஊழியர்களுக்கு வாக்கி டாக்கிகள் வழங்க திட்டம்
விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையில் பாதுகாப்பு பணியாளர்களுக்கு சுழற்சி முறையில் 20 வாக்கி டாக்கிகளை வழங்க மருத்துவமனை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனை, மகப்பேறு பிரிவிற்கு சிகிச்சைக்காகவும், பரிசோதனை, பிரசவத்திற்காக தினமும் பலரும் வந்து செல்கின்றனர். இங்கு பாதுகாப்பு பணியில் சுழற்சி முறையில் 20 பேர் என காலை முதல் இரவு வரை மொத்தம் 40 பேர் பணியாற்றுகின்றனர். இவர்கள் தங்களுக்குள் தொடர்பு கொள்ள அலைபேசியை பயன்படுத்துகின்றனர். ஆனால் பெரும்பாலான நேரங்களில் நோயாளிகளை உடன் இருந்து பார்த்துக் கொள்பவர்களுக்குள் ஏற்படும் வாக்குவாதம், மருத்துவ பணியாளர்களின் அவசர அழைப்புகளின் போது அலைபேசியில் பாதுகாப்பு பணியாளர்களை தொடர்பு கொள்ள முடிவதில்லை.இதனால் வார்டில் பணியில் இருக்கும் ஒப்பந்த ஊழியர்கள் நேரில் சென்று பாதுகாப்பு பணியாளர்களை அழைக்க வேண்டியுள்ளது. இந்த நிலையை போக்குவதற்காகவும், மருத்துவமனையின் பாதுகாப்பு அதிகப்படுத்துவதற்காகவும் 20 வாக்கி டாக்கிகளை வாங்க மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.இவற்றை சுழற்சி முறையில் பணியாற்றும் 20 ஊழியர்களுக்கும் வழங்கி தடையற்ற தொடர்பை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் வார்டில் ஏற்படும் பிரச்னையை தடுத்து வளாகத்தின் பாதுகாப்பு உறுதி செய்ய முடியும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.