நதிக்குடியில் மேய்ச்சல் நிலத்தில் தொடருது செம்மண் கொள்ளை
சிவகாசி:' வெம்பக்கோட்டை ஒன்றியம் நதிக்குடியில் மேய்ச்சல் புறம்போக்கு நிலத்தில் சமூக விரோதிகள் இரவு நேரத்தில் மீண்டும் செம்மண் அள்ளுவதால் இயற்கை வளம் பாதிக்கப்படுவதாக மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.வெம்பக்கோட்டை ஒன்றியம் நதிக்குடியில் 350 ஏக்கருக்கு மேல் மேய்ச்சல் புறம்போக்கு நிலம் உள்ளது. முற்றிலும் செம்மண் கொண்ட இந்த நிலத்தில் மக்கள் தங்களது ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு விடுகின்றனர். தவிர இப்பகுதி முழுவதுமே அதிகமான மரங்கள் உள்ளது. இந்நிலையில் இப்பகுதியில் சமூகவிரோதிகள் சிலர் இரவு நேரத்தில் மணல் அள்ளும் இயந்திரத்தின் உதவியுடன் டிராக்டர், லாரிகளில் செம்மண் கடத்துகின்றனர். இதனால் அந்த நிலம் முழுவதும் ஆங்காங்கே பள்ளமாக காணப்படுகின்றது. மணல் திருடும் சமூக விரோதிகள் இதற்காக அங்குள்ள மரங்களையும் அழித்து விடுகின்றனர். இதனால் ஒரே நேரத்தில் மரத்தை அழிப்பதோடு மட்டுமல்லாது மணலையும் எடுத்து இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் அதிருப்தியில் உள்ளனர். மேலும் மழைக்காலங்களில் பள்ளங்களில் தண்ணீர் நிரம்பும்போது பள்ளம் இருப்பது தெரியாமல் ஆடு, மாடு போன்ற கால்நடைகள் உள்ளே விழுந்து இறக்க வாய்ப்பு உள்ளது. எனவே இப்பகுதியில் மணல் திருடுவதை வருவாய்த்துறை, கனிமவளத் துறையினர் தடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.