திருநெல்வேலி நிலையை நோக்கி சிவகாசி கட்சிக்குள் குஸ்தியால் தொண்டர்கள் அதிருப்தி
சிவகாசி:விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியில் தி.மு.க., வின் மேயருக்கும், கவுன்சிலர்களுக்கும் இடையே நடக்கும் உட்கட்சி பூசலால் கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர். சிவகாசி நகராட்சி, திருத்தங்கல் நகராட்சி இரண்டும் இணைக்கப்பட்டு சிவகாசி மாநகராட்சியாக 2021ல் உருவாக்கப்பட்டது. 48 வார்டுகள் உள்ளன. தேர்தலில் தி.மு.க., 25, அ.தி.மு.க., 11, காங். 6, பா.ஜ., ஒன்று, ம.தி.மு.க., ஒன்று, வி.சி., 2, சுயே., 2 இடங்களில் வெற்றி பெற்றனர். அ.தி.மு.க., வைச் சேர்ந்த 9 பேர் தி.மு.க.,வில் சேர்ந்தனர். இதனால் தி.மு.க., எண்ணிக்கை 34 ஆனது. மாநகராட்சியின் முதல் பெண் மேயராக சங்கீதா, துணை மேயராக அதே கட்சியை சேர்ந்த விக்னேஷ் பிரியா தேர்ந்தெடுக்கப்பட்டனர்.துவக்கம் முதலே மேயருக்கும், தி.மு.க., கவுன்சிலர்களுக்கும் சுமுக உறவு இல்லை. மாநகராட்சி கூட்டங்களில் சண்டை, சச்சரவுகள் தொடர்ந்தன. மாவட்ட செயலாளரும் அமைச்சருமான தங்கம் தென்னரசு அவ்வப்போது தலையிட்டு பிரச்னையை தீர்த்து வைப்பார். ஆனாலும் உட்கட்சி பூசல் குறையவில்லை. உச்சகட்டமாக நேற்று முன்தினம் நடந்த கூட்டத்தில் வீட்டுமனை அங்கீகாரம் தொடர்பான தீர்மானத்திற்கு அனைத்து கவுன்சிலர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேயருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர். மேயர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்போவதாகவும் கூறினர். இந்த மோதல் போக்கினால் பணிகள் பாதிக்கப்படுவதாகவும், கட்சியின் நற்பெயர் கெடுவதாகவும் தொண்டர்கள் புலம்புகின்றனர். விரைவில் சட்டசபை தேர்தல் வர உள்ள நிலையில் இதே நிலை நீடித்தால் வெற்றி பெறுவது மிகவும் சிரமம் என தலைமை வரை கொண்டு சென்றுள்ளனர். திருநெல்வேலியை போல சிவகாசி மாநகராட்சியிலும் மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டால் எதிர்க்கட்சிகளுக்கு அரசியல் செய்ய பெரும் வாய்ப்பு கிடைத்துவிடும். எனவே தங்கம் தென்னரசு தலையிட்டு பிரச்னையை தீர்க்க வேண்டும் என கட்சியினர் எதிர்பார்க்கின்றனர்.