கோயில் வழிபாடு பிரச்னையால் ஜாதி அடையாளத்துடன் நட்ட கற்கள் அகற்றம்
சத்திரப்பட்டி: ராஜபாளையம் அடுத்த எஸ்.ராமலிங்காபுரம் சிவகாமிபுரத்தில் இரு தரப்பினர் இடையே கோயில் வழிபாட்டில் பிரச்னை ஏற்பட்டு ஜாதி அடையாளத்துடன் நடப்பட்ட கற்களை வருவாய்த் துறையினர் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றினர்.சத்திரப்பட்டி அருகே எஸ்.ராமலிங்காபுரம் அடுத்த சிவகாமிபுரம் பகுதியில் இரண்டு சமுதாயத்தினர் இடையே வலம்புரி விநாயகர் கோயில் வழிபாட்டில் பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில் ஒரு தரப்பினர் கோயிலை சுற்றி தங்கள் ஜாதி அடையாளத்துடன் கூடிய கல் ஊன்றினர். இதற்கு போட்டியாக மற்றொரு தரப்பினர் தங்களது ஜாதி அடையாளத்துடன் கூடிய வேலி கற்களை பாதையில் நட்டனர்.இதையடுத்து தாசில்தார் ராமசுப்பிரமணியன், ஏ.டி.எஸ்.பி., அசோகன், டி.எஸ்.பி., ப்ரீத்தி தலைமையில் போலீசார் மண் அள்ளும் இயந்திரம் மூலம் இரு தரப்பினர் நட்ட கற்களை அகற்றினர். இதனால் போலீசாருக்கும் அப்பகுதி மக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.