உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / புதர் சூழ்ந்த ஓடை, ரோடு பணிகள் துவங்காத தெருக்கள் -அவதியில் ராஜபாளையம் நகராட்சி 37வது வார்டு மக்கள்

புதர் சூழ்ந்த ஓடை, ரோடு பணிகள் துவங்காத தெருக்கள் -அவதியில் ராஜபாளையம் நகராட்சி 37வது வார்டு மக்கள்

ராஜபாளையம்: தெருக்கள் ரோடு பணிகள் முடியாதது, புதர் சூழ்ந்துள்ள ஓடை, கொசு தொல்லை என தீர்வினை எதிர்பார்க்கின்றனர் ராஜபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட 37வது வார்டு மக்கள். இந்திரா நகரின் ஒரு பகுதி, ஸ்ரீரெங்கபாளையம், ஐ.என்.டி.யூ.சி., நகர் உள்ளிட்ட பகுதிகளை கொண்டுள்ளது. மெயின் ரோடுகளை தவிர தெருக்களின் குறுக்கு சந்து பகுதிகள் இதுவரை புதிய ரோடு அமைக்காமல் உள்ளதால் வாகன போக்குவரத்திற்கு மக்கள் தடுமாறுவதுடன் புதர் செடிகள் வளர்ந்து காணப்படுகிறது.பீமராஜா சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைந்த உடன் ஸ்ரீரெங்கபாளையத்திற்கு நுழையும் இணைப்பு ரோடு குறுகலாகவும் விபத்து அபாயம் ஏற்பட்டு வருகிறது. சஞ்சீவி மலையில் இருந்து வரும் ஓடையில் குப்பைகள் குவிக்கப்பட்டும், புதர் மண்டி உள்ளதால் கழிவு நீர் தடை படுகிறது. புதிய பேவர் பிளாக் ரோடுகள் ஆங்காங்கே தோண்டப்பட்டு மேடு பள்ளங்களாக மாறியதால் போக்குவரத்து பாதிக்கிறது. இந்திரா நகரின் ஒரு பகுதி மேம்பாட்டு பணிகளுக்காக சிமெண்ட் ரோடு பெயர்க்கப்பட்டுபுதிய ரோடு போடவில்லை. சாக்கடைகளில் புதர் வளர்ந்து சுகாதாரப்பணிகள் நடைபெறவில்லை. வளர்ச்சியை மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

தெருக்கள் சேதம்

சரோஜா, குடியிருப்பாளர்: பல சந்துகளில் புதிய ரோடு அமைக்காததால் போக்குவரத்துக்கு மக்கள் தடுமாறி செல்ல வேண்டி உள்ளது. ஸ்ரீரெங்க பாளையத்தில் இருந்து இந்திரா நகருக்கு வரும் சந்தின் சாக்கடை மண் மேவியுள்ளதால் மழை நேரங்களில் கழிவு நீர் தெருவில் ஓடுகிறது.

ஓடை துார் வார வேண்டும்

ராணி, குடியிருப்பாளர்: சஞ்சீவி மலை, மேம்பாலம் கிழக்கு பகுதியில் இருந்து வரும் பிரதான ஓடையில் புதர் மண்டி வளர்ந்துள்ளது. ஏற்கனவே மண் மேவி உள்ளதால் கழிவு நீர் வெளியேற வழியின்றி தேங்கி கொசுப்புழு உற்பத்தி அதிகமாகிறது. ஓடை சாக்கடைகளை முழுமையாக துார் வர வேண்டும்.

திறந்தவெளி கிணறு

ஜானகி, குடியிருப்பாளர்: ஸ்ரீரெங்க பாளையம் முதல் தெருவில் அனுக்கிரக விநாயகர் கோயில் பின்பு திறந்தவெளி கிணறு சுகாதாரமற்ற முறையில் இருந்து வருகிறது. பிளாஸ்டிக் உள்ளிட்ட குடியிருப்பு கழிவுகள் குவிக்கப்படுவதுடன் நாய் பூனை உள்ளிட்ட பிராணிகள் தவறி விழுந்து துர்நாற்றம் ஏற்படுகிறது.

நடவடிக்கை எடுக்கப்படும்

கார்த்திக், கவுன்சிலர்: விடுபட்ட குறுக்கு சந்துகள் ஒப்பந்ததாரர்களால் தாமதம் ஏற்படுகிறது. ஓடை சுத்தப்படுத்துவது குறித்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை விடுபட்ட குடியிருப்புகளுக்கு இணைப்பினால் ரோடு தோண்டப்படுகிறது. பூங்கா பராமரிப்பு செய்யப்படும். அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு குறைகள் சரி செய்யப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி