உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வாறுகால் இல்லாத தெருக்கள்; குறுகிய ரோடால் விபத்து

வாறுகால் இல்லாத தெருக்கள்; குறுகிய ரோடால் விபத்து

ஸ்ரீவில்லிபுத்துார்: குடியிருப்புகள் உருவாகி 25 ஆண்டுகள் கடந்த நிலையில் தெருக்களில் ரோடு, வாறுகால் வசதி இல்லாமல் சிரமம், வாகன போக்குவரத்து அதிகரித்து வரும் நிலையில் குறுகிய ரோட்டால் விபத்து அபாயம், மயானத்தில் அடிப்படை வசதி இல்லாமல் சிரமம், சுகாதாரக் கேடு, கொசு தொல்லை என பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கிருஷ்ணன் கோவில் போக்குவரத்து நகர் மக்கள் வசித்து வருகின்றனர்.இந்நகர் குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் ராஜு, கண்ணன், கணேசன், தாமரைச்செல்வன், முனீஸ்வரன், குருசாமி, ரவி, கணேசன் ஆகியோர் கூறியதாவது:போக்குவரத்து நகரில் 220க்கும் மேற்பட்ட குடும்பங்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். 25 ஆண்டுகளாக இந்நகரில் உள்ள 7 தெருக்களில் ரோடு, வாறுகால் வசதிகள் இல்லாததால் பலமுறை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றதில் தற்போது தான் 3,6வது தெருக்களில் மட்டும் தார் ரோடு போடப்பட்டுள்ளது.மீதமுள்ள 5 தெருக்களில் எந்தவித வசதிகளும் செய்யப்படாமல் உள்ளது. 1வது , 7வது தெரு மிகவும் மோசமாக உள்ளது. 3வது மற்றும் 4வது தெருவில் பாதியளவு மெட்டல்ரோடு போடப்பட்டு மீதி பகுதிகளில் ரோடு போடப்படவில்லை. போக்குவரத்து நகருக்கு என உள்ள மயானத்தில் தண்ணீர் வசதி நிழற்குடை, குளிப்பறை இல்லாமல் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனை கட்டித்தர அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பல ஆண்டுகளாக 6வது தெருவில் சாக்கடைகள் மூடப்படாமல் உள்ளதால் பலவித நோய்கள் பரவும் நிலை உள்ளது. மேலும் கிருஷ்ணன் கோவிலில் இருந்து குன்னூர் வரை உள்ள ரோட்டில் நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. கனரக வாகனங்கள் அதிகளவில் வந்து செல்கிறது. ஆனால் ரோடு குறுகலாக இருப்பதால் எதிரும், புதிருமாக இரு வாகனங்கள் வரும்போது விபத்து அபாயம் காணப்படுகிறது. எனவே, ரோட்டை அகலப்படுத்த வேண்டும்.மேற்குப் பகுதியில் உள்ள ஸ்ரீராம் நகரில் பாதி தெரு அளவிற்கு வாறுகால் கட்டியும், மீதி வாறுகால் கட்டப்படாமலும், தார் ரோடு அமைக்கப்படாமலும் மண் தரையாக உள்ளதால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதே போல் அருகிலுள்ள சப்தகிரி நகரில் இதுவரை வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை. ரோடு வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை. இதனால் மழைக்காலங்களில் இப்பகுதி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.போக்குவரத்து நகரில் ஏராளமான அரசு ஊழியர்கள் வசித்து வரும் நிலையில் அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக செய்யப்படாமல் உள்ளது. இதனை செய்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை