* சூப்பர் ரிப்போர்டர்
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே மலைப்பட்டி ஆதிதிராவிடர் காலனியில் மூன்று ஆண்டாக குடிநீர் தொட்டி கட்டப்பட்டு வருகிறது. எப்போது முடிவுக்கு வரும் என தெரியாததால் மக்கள் திண்டாடி வருகின்றனர். கழிப்பறையின்றி திறந்த வெளியை பயன்படுத்தி வரும் கொடுமை அரங்கேற்றி வருகிறது. அருப்புக்கோட்டை அருகே மலைப்பட்டி ஊராட்சியை சேர்ந்தது ஆதிதிராவிடர் காலனி. காலனி உருவாகி 60 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் போதுமான அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை. ஊராட்சியின் பல பகுதிகளில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் ஆதிதிராவிடர் காலனிக்கு மட்டும் குடிநீர் இல்லை. குடிநீரை விலை கொடுத்து வாங்கி மக்கள் பயன்படுத்துகின்றனர். காலனியில் மேல்நிலை தொட்டி 3 ஆண்டுகளாக கட்டப்பட்டு வருகிறது. ஏற்கனவே இருந்த மேல்நிலைத் தொட்டி சேதம் அடைந்து உள்ளது. குளிப்பதற்கு மக்கள் சிரமப்பட்டு வந்த நிலையில், ஊராட்சி மூலம் 2023 ல், 3.50 லட்சம் செலவில் மின் மோட்டார் அமைத்து குளியல் தொட்டி கட்டப்பட்டது. பயன்பாட்டிற்கு வந்த 3 நாட்களிலேயே போர்வெல்லில் தண்ணீர் வராததால், மின் மோட்டார் பழுதாகிவிட்டது. 2 ஆண்டுகளாக குளியல் தொட்டி காட்சி பொருளாக உள்ளது. காலனிக்கு வரும் மெயின் ரோடு அடிக்கல் நாட்டியதோடு சரி பணிகள் எதுவும் நடக்கவில்லை. காலனி நடுவில் ஓடை உள்ளது. ஓடை கடைசி வரை துார்வாரப்படாமல் புதர்களும் அடைப்பும் ஏற்பட்டுள்ளதால் மழைக்காலத்தில் வெள்ளம் அருகில் உள்ள வீடுகளில் புகுந்து விடுகிறது. பொது கழிப்பறை இல்லாமல் கதிறந்தவெளியை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பொது இடங்கள் இருந்தாலும் சமுதாய கூடம், கழிப்பறை உள்ளிட்டவைகள் கட்டப்படவில்லை. இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளி பின்புறம் உள்ள ரோட்டை புதியதாக அமைத்தால் காலனியில் படிக்கும் மாணவர்கள் வந்து செல்ல வசதியாக இருக்கும். செயல்படாத குளியல் தொட்டி பேபி, குடும்பத்தலைவி: காலனி மக்கள் குளிப்பதற்கு வசதியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி மூலம் குளியல் தொட்டி கட்டப்பட்டது. போர்வெல்லில் தண்ணீர் வரவில்லை. இதனால் குளியல் தொட்டி பயன்பாடு இல்லாமல் காட்சி பொருளாக உள்ளது. மின்மோட்டார் பழுதாகிவிட்டது. ஊராட்சி நிர்வாகம் குளியல் தொட்டிக்கு தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும். சுகாதாரவளாகம் அவசியம் உமையாள், குடும்பத் தலைவி: காலனியில் ஊராட்சி கழிப்பறை இல்லை. பெண்கள் கழிப்பறை இன்றி சிரமப்படுகின்றனர். ஆண்கள் பெண்களுக்கு என தனித்தனியாக நவீன சுகாதார வளாகம் கட்டித் தர வேண்டும். பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை. காலனியில் ஊராட்சிக்கு என இடங்களில் இருந்தும் கட்டப்படவில்லை. குடிநீரில் பாரபட்சம் சுந்தரலட்சுமி, குடும்பத் தலைவி: ஊராட்சி முழுவதும் தாமிரபரணி குடிநீர் வந்த நிலையில், எங்கள் ஆதிதிராவிடர் காலனிக்கு மட்டும் குடிநீர் வருவது இல்லை. புழக்கத்திற்கு தண்ணீர் இன்றி சிரமமாக உள்ளது. குடிநீரை தனியார் இடத்தில் காசு கொடுத்து வாங்கி பயன்படுத்துகிறோம். எங்கள் பகுதிக்கு தாமிரபரணி குடிநீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.