சுவையற்ற குடிநீர், சேதமான ரோடு, ரேஷன் வாங்க அலைச்சல்
காரியாபட்டி ; சுவையற்ற குடிநீர், சேதமான ரோடு, ரேஷன் வாங்க அலைச்சல் உட்பட பல்வேறு பிரச்சனைகளால் பாப்பனம் ஊராட்சி மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். காரியாபட்டி பாப்பனம் ஊராட்சியில் சக்கரக்கோட்டை, பல்லவரேந்தல் கிராமங்கள் உள்ளன. பாப்பனம் கிராமத்தில் நாடக மேடை, கோயில், பள்ளி முன்பாக மண் தரையாக இருப்பதால் மழை நேரங்களில் சேரும் சகதியமாக உள்ளது. ஒரு சில வீதிகளில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கவில்லை. மேல்நிலைத் தொட்டி அருகில் தண்ணீர் வெளியேற வழி இன்றி பாசம் பிடித்து புழு பூச்சிகள் நடமாட்டம் இருப்பதால் அசுத்தமாக உள்ளது.கண்மாய் கரை சேதம் அடைந்து கரை முழுதும் சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளது. மடைகள் சேதம் அடைந்துள்ளன. மழை நீரை சேமிக்க முடியாமல் வீணாக வெளியேறி வருகிறது. முழுமையாக விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். நரிக்குடி மெயின் ரோட்டில் இருந்து பாப்பனம் வரை போடப்பட்ட ரோடு சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. வாகனங்கள் சென்றுவர சிரமம் ஏற்படுகிறது.பல்லவரேந்தல் கிராமத்தில் தாமிரபரணி குடிநீர் கிடையாது. உள்ளூர் தண்ணீர் சப்ளை ஆகிறது. சுவையின்றி இருப்பதால் குடிநீரை விலைக்கு வாங்குகின்றனர். போதிய வாறுகால் வசதி கிடையாது. பள்ளி அருகே உள்ள மினி மேல்நிலைத் தொட்டி சேதமடைந்து, எப்போது இடிந்து விழுமோ என்கிற நிலை உள்ளது. களத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டடத்தின் மேற்கூரை உடைந்து உள்ளன.பலத்த காற்றுக்கு தகடுகள் பறந்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. ரேஷன் பொருட்கள் வாங்க 3 கி.மீ., தூரம் நடந்து செல்கின்றனர். கண்மாயில் சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. மடைகள் சேதம் அடைந்துள்ளதால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.சக்கரைக்கோட்டை கிராமத்திலிருந்து பாப்பனத்திற்கு 5 கி.மீ. தூரம் ரோடு படு மோசமாக உள்ளது. வாகனங்கள் செல்ல முடியவில்லை. அடிபம்ப் பழுதாகி 10 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. மின் மோட்டார் பழதாகி ஒரு மாதமாக கிடப்பில் உள்ளது. கழிவு நீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. தெரு விளக்கு சரி வர எரியவில்லை. ஊருணியில் மண் சரிவு ஏற்படுகிறது. ஊருணி ரோட்டில் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்துள்ளது. மயான ரோட்டில் மின் விளக்கு இல்லை.