ஈட்டிய ஒப்படைப்பு விடுப்பு அறிவிப்பு தேர்தல் அறிக்கை போல் உள்ளது
அருப்புக்கோட்டை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இந்த பட்ஜெட்டில் ஈட்டிய ஒப்படைப்பு விடுப்பு குறித்து அறிவிப்பு இது தேர்தல் அறிக்கையில் சொல்வது போல உள்ளது, என அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் குமுறுகின்றனர்.தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஈட்டிய விடுப்பு 15 நாட்கள் உள்ளது. இதை எடுக்காதவர்கள் ஆண்டு முதலில், 15 நாட்களுக்கான முழு ஊதியம் கிடைக்கும். 2020ல் கொரோனா காலத்தில் அப்போது ஆட்சியில் இருந்த அ.தி.மு.க., அரசு ஈட்டிய விடுப்பை ஒரு ஆண்டிற்கு நிறுத்தி வைத்தது. பின்னர் வந்த தி.மு.க., அரசும் ஈட்டிய விடுப்பிற்கு பணம் பெறுவதை தொடர்ந்து நிறுத்தியது. பின்னர், மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தப்படுகிறது என அறிவித்தது. ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு மூலம் பண பலன் பெறுவோர் 9 லட்சத்திற்கு மேல் உள்ளனர். பின், தொடர்ந்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், ஆசிரியர் சங்கம் அரசிடம் ஈட்டிய ஒப்படைப்பு பண பலன் கேட்டு கோரிக்கை வைத்தனர்.இந்நிலையில் நேற்று தமிழக அரசின் பட்ஜெட்டில் ஈட்டிய ஒப்படைப்பு விடுப்பு அறிவிப்பில் அடுத்த ஆண்டு 1.4.2026ல் அமுலுக்கு வரும் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கொதித்து போய் உள்ளனர். இந்த அரசு தொடர்ந்து ஊழியர்களை வஞ்சிக்கிறது என புலம்புகின்றனர்.இது குறித்து, கண்ணன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநில துணை தலைவர்: இந்த ஆண்டுக்கு தானே பட்ஜெட். அடுத்த நிதி ஆண்டிற்கு கொடுப்பதை இப்போதே ஏன் அறிவிக்க வேண்டும். இது தேர்தல் அறிக்கையில் சொல்வது போல உள்ளது. 2026ல், பிப்ரவரி மாதம் தேர்தல் அறிவிப்பு வந்து விடும். தேர்தல் பரப்புரையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஈட்டிய ஒப்படைப்பு விடுப்பிற்கான பண பலன் வழங்கப்படும் என்று சொல்வது போல் உள்ளது. எங்கள் ஆட்சி முடியும் வரை பணப்பலன் வழங்க மாட்டோம் என்பதை பட்ஜெட்டில் அறிவிப்பது வேடிக்கை.