உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விருதுநகர் மெயின் பஜாரில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு ஆமை வேகத்தில் வாகனங்கள்

விருதுநகர் மெயின் பஜாரில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு ஆமை வேகத்தில் வாகனங்கள்

விருதுநகர்: விருதுநகர் மெயின் பஜாரில் ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் போக்குவரத்து நிறைந்த நேரத்தில் வாகனங்கள் முன்னேறி செல்ல முடியாமல் ஆமை வேகத்தில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.டூவீலர், கார், ஆட்டோக்களில் மக்கள் விருதுநகர் மெயின் பஜாருக்கு வந்து பொருள்களை வந்து வாங்கி செல்கின்றனர். இவர்களின் வாகனங்களை தேசபந்து மைதானத்தில் நிறுத்தி விட்டு கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்கி செல்வது வழக்கம்.ஆனால் மெயின் பஜார் வழியாக பஸ்கள் சேவை நிறுத்தப்பட்ட பின்பு ஆக்கிரமிப்புகள் அதிகரிக்கத் துவங்கியது. மேலும் தற்போது கடைகள் முன்பு பொருட்களை வைத்து ரோட்டை ஆக்கிரமித்துள்ளனர். டூவீலரில் வருபவர்கள் மைதானத்தில் வாகனத்தை நிறுத்தாமல் கடைகள் முன்பு நிறுத்துகின்றனர்.இதை தவிர்க்க ரோட்டின் இருபுறமும் கயிறு அமைக்கப்பட்டு அதற்குள் வாகனங்களை நிறுத்திக் கொள்ள வியாபாரிகள், நகராட்சி, போலீசார் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆனால் தற்போது இந்த முடிவு காற்றில் பறக்க விடப்பட்டு வாகனங்கள் ரோட்டின் பெரும் பகுதியை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன.மேலும் காலை, மாலை நேரங்களில் பஜார் பகுதியில் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு ஆமை வேகத்தில் வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டியுள்ளது. இதை சரி செய்து வாகனங்களுக்கு போலீசார் அபராதம் விதிக்கும் போது வாக்குவாதங்களும் ஏற்படுகிறது. இந்த நிலை எப்போது மாறும் என்ற அளவுக்கு மக்கள் விரக்தியில் உள்ளனர்.வெயில் காலத்தில் வயதானவர்கள் பஜாருக்கு வரும் போது மயக்கம் அடைந்தால் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லக்கூட வாகனங்கள் பஜாருக்குள் வர முடியாத அளவிற்கு ஆக்கிரமிப்புகள் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் விருதுநகர் மெயின் பஜார் ஆக்கிரமிப்புகளை அகற்ற தகுந்த நடவடிக்கை எடுத்து, வாகனங்கள் நிறுத்தும் இடத்தை முறைப்படுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை