பயன்பாட்டிற்கு வருவதில் காலதாமதமாகும்; திருமங்கலம்-ராஜபாளையம் நான்கு வழிச்சாலை
ஸ்ரீவில்லிபுத்துார் : மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வரையிலான நான்கு வழிச்சாலையில் பல்வேறு இடங்களில் மேம்பாலங்களும், ஸ்ரீவில்லிபுத்தூர்,ராஜபாளையத்தில் ரயில்வே மேம்பாலங்கள் அமைக்கும் பணிகளும் மந்தகதியில் நடப்பதால்,இந்த சாலை பயன்பாட்டுக்கு வருவதில் காலதாமதம் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. தமிழகத்தின் மதுரை மாவட்டத்தையும், கேரளாவின் கொல்லம் நகரத்தையும் இணைக்கும் வகையில் திருமங்கலம்- ராஜபாளையம் வரை 71.6 கி.மீ.தூரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் ஓராண்டிற்கும் மேலாக நடந்து வருகிறது. இதனை திருமங்கலத்தில் இருந்து அழகாபுரி வரை மதுரை மண்டல தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையமும், அழகாபுரியில் இருந்து ராஜபாளையம் வரை நாகர்கோவில் மண்டல தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையமும் பணிகளை செய்து வருகின்றனர்.இந்த வழித்தடத்தில் ரோடுகள் அமைக்கும் பணி பெரும்பாலும் முடிவடைந்துள்ள நிலையில், மேம்பாலங்கள் அமைக்கும் பணியில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. தற்போது திருமங்கலத்தில் இருந்து அழகாபுரி, சுப்புலாபுரம், டி. கல்லுப்பட்டி, குன்னத்துார் உட்பட பல இடங்களில் மேம்பால பணிகள் 60 சதவீதம் மட்டுமே நடந்துள்ளது. அழகாபுரியில் இருந்து இருந்து ராஜபாளையம் வரை 95 சதவீத அளவிற்கு ரோடுகள் அமைக்கும் பணிகள் முடிந்த நிலையில் எஸ்.ராமலிங்கபுரம், ஸ்ரீவில்லிபுத்துார் ரயில்வே மேம்பால பணிகள் இன்னும் துவங்கவில்லை. இதற்கு ரயில்வே துறையின் அனுமதி பெறுவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருப்பதால் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.இந்த இரண்டு இடங்களிலும் ரயில்வே மேம்பாலங்கள் அமைக்க ஹைதராபாத்தில் இருந்து இரும்பு தூண்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. ரயில்வே துறை அனுமதி கிடைத்தவுடன் இதனை பொருத்தும் பணிகள் துவக்கப்படும். இதனால் இந்த வழித்தடத்தில் அனைத்து மேம்பால பணிகளும் முடிவடைய அக்டோபர்மாதம் வரை ஆகலாம் என நாகர்கோவில் மண்டல இயக்குனர் வேல்ராஜ் கூறினார்.இருந்த போதிலும் தற்போது நான்கு வழிச்சாலையில் கிருஷ்ணன்கோவில் லட்சுமியாபுரம் அருகே டோல்கேட், மேம்பாலங்கள் மற்றும் முக்கிய சந்திப்பு பகுதிகளில் உயர் கோபுர மின்விளக்குகள், கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கான வழித்தட வழிகாட்டி போர்டுகள், சர்வீஸ் ரோடுகளில் பயணிகள் நிழற்குடை போன்ற பணிகள் முடிவடைந்தநிலையில் வாகன போக்குவரத்து நடந்து வருகிறது. 85 சதவீத பணிகள் நிறைவு
கீர்த்தி பரத்வாஜ், திட்ட இயக்குனர் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், மதுரை மண்டலம்: மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து விருதுநகர் மாவட்டம் அழகாபுரி வடுகப்பட்டி வரை 35.6 கிலோமீட்டர் தூரத்திற்கு நான்கு வழிச்சாலை பணிகள் நடந்து வருகிறது. இதில் 85 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது. மேம்பாலங்கள் கட்டுமான பணி நடந்து வருகிறது. சில பகுதிகளில் சப்வே மற்றும் சர்வீஸ் ரோடுகள் அமைக்க மக்கள்கோரிக்கை விடுத்துஉள்ளனர். ஒரு சில மாதங்களில் முழு அளவில் பணிகள் முடிவடையும். 95 சதவீத பணிகள் நிறைவு
-வேல்ராஜ், திட்ட இயக்குனர், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், நாகர்கோவில் மண்டலம்: விருதுநகர் மாவட்டம் அழகாபுரி வடுகப்பட்டியில் இருந்து ராஜபாளையம் வரை 36 கிலோ மீட்டர் தூரத்திற்குநான்கு வழிச்சாலை பணிகள் நடந்து வருகிறது. இதில் 95 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது.ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துாரில்ரயில்வே மேம்பாலங்கள் அமைக்கும் பணிக்கு ரயில்வே துறை அனுமதி பெற வேண்டி உள்ளது. அதற்குரிய அனுமதியையும் பெற்று விரைவில் மேம்பால பணிகள் துவங்கப்படும். அக்டோபர் மாதத்திற்குள் முழு அளவில் பணிகள் முடிவடைந்து, மக்கள் பயன்பாட்டுக்கு வரும்.