அடுக்குமாடி குடியிருப்பு பணிகள் 5 ஆண்டாக இழுத்தடிப்பு: செயல்பாட்டிற்கு வராததால் பயனாளிகள் தவிப்பு
ராஜபாளையம்: ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோட்டில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி வீடுகள் தொடங்கி 5 ஆண்டுகளை எட்ட உள்ள நிலையில் விரைந்து பயனாளிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.ராஜபாளையம் மேலப் பாட்ட கரிசல்குளம் ஊராட்சி சமத்துவபுரம் அருகே தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் கீழ் ரூ.80 கோடி மதிப்பீட்டில் 5.8 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு மூன்று மாடியுடன் கூடிய 864 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இதற்கான பூமி பூஜை 2020 மே மாதம் தொடங்கி 15 மாதங்களுக்குள் கட்டுமான பணிகள் முடிந்து 2021 அக். மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டது.தொடக்கத்தில் பயனாளிகள் சார்பில் ரூ. 46 ஆயிரம் என பங்களிப்பு தொகை நிர்ணயிக்கப்பட்டு பின்னர் ரூ.89,000 என உயர்த்தப்பட்டுள்ளது. மீத தொகை மத்திய மாநில அரசு சார்பில் செலுத்தப்படும்.இக்குடியிருப்புகளில் ஏழ்மையில் நிலையில் உள்ள வீடற்றவர்கள், கண்மாய், கால்வாய் நீர் நிலைகளில் குடியிருந்து வீடுகளை இழந்தோர், மாற்றுத்திறனாளிகள் என பல்வேறு தரப்பினர் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் முடிந்து அவர்களிடம் ஒப்படைத்திருக்க வேண்டும். இந்நிலையில் 2023 பிப். மாதம் கட்டுமான பணிகளும் முடித்து வைக்கப்பட்டது. இதில் ஒவ்வொரு வீடும் 400 சதுர அடி பரப்பளவில் சமையலறை, படுக்கை அறை, குளியலறை, கழிப்பறை, வரவேற்பறை உள்ளிட்ட வசதிகளுடன் முடிக்கப்பட்டது.ஆனால் அதன் பின் கழிவுநீர் வெளியேற வசதி நகராட்சி பாதாள சாக்கடை திட்டத்துடன் இணைக்க ஒப்புதல், பூங்கா, கழிவு நீர் சுத்திகரிப்பு அமைப்பு, சுற்றுச்சுவர் போன்ற காரணங்களால் தாமதம் ஏற்பட்டு தற்போது வரை முடிந்த பாடு இல்லை. இதனால் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளுக்கு முன்பணம் செலுத்தி விண்ணப்பித்தவர்களில் ஒரு பகுதியினர் முழு பங்களிப்பு தொகை செலுத்தியுள்ளனர். அவர்களும் தங்களுக்கான வீடு ஒதுக்கீடு வழங்கி ஒப்படைக்கப்படுமா என்ற காத்திருப்பின் எதிர்பார்ப்புடன் உள்ளனர். விரைவில் தாமதத்திற்காக கூறப்படும் கட்டட பணிகளை முடித்து மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயனாளிகள் காத்திருக்கின்றனர்.