மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு வைக்கப்பட்ட சிலைகள் நேற்று அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் மேள தாளங்கள் முழங்க பல்வேறு முக்கிய வீதிகள் வழியாக எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்பட்டது.விருதுநகரின் முக்கிய பகுதிகள், அல்லம்பட்டி, பாண்டியன் நகர், வச்சக்காரப்பட்டி, ஆமத்துார், சூலக்கரை ஆகிய பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வைக்கப்பட்ட 35 விநாயகர் சிலைகள் நேற்று மாலை அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் மேலதாளங்கள் முழங்க தேசபந்து மைதானத்திற்கு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது. அங்கிருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக புல்லலக்கோட்டை ரோடு வழியாக கொண்டுச் செல்லப்பட்டு கல்கிடங்கில் கரைக்கப்பட்டது.* காரியாபட்டியில் பா.ஜ., சார்பாக 2, முக்கு ரோடு மாரியம்மன் கோயில் நிர்வாகம் சார்பாக 1 பிள்ளையார் சிலையில் வைக்கப்பட்டு, சிறப்பு பூஜை, அபிஷேகங்கள் செய்யப்பட்டு, நேற்று மாலை 6 :00மணிக்கு பஸ் ஸ்டாண்ட் வழியாக ஊர்வலமாக சென்று ஐயப்பன் கோயிலில் வழிபாடு செய்து, கே. கரிசல்குளம் கண்மாயில் கரைக்கப்பட்டது.* நரிக்குடி சொட்டமுறி, டி.வேலங்குடி, மேல குமிழாங்குளம் கிராமத்தினர் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிள்ளையார் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கண்மாயில் கரைக்கப்பட்டன.* ராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் ஹிந்து முன்னணி சார்பில் பச்ச மடம், பெரிய கடை பஜார், பூபால்பட்டி தெரு, மலையடிப்பட்டி, சத்திரப்பட்டி, எஸ். ராமலிங்காபுரம், தளவாய்புரம், சேத்துார் உட்பட 31 இடங்களில் பிள்ளையார் சிலைகள் வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. நேற்று மாலை 6:00 மணிக்கு பஞ்சு மார்க்கெட் பகுதியில் இருந்து ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலத்தை த.மா.கா., மேற்கு மாவட்ட தலைவர் ஜெகநாதராஜா துவக்கி வைத்தார். பா.ஜ., வி.ஹெச்.பி., பஜ்ரங்தள் உள்ளிட்ட ஹிந்து அமைப்பினர் பங்கேற்றனர்.மதுரை ரோடு, பழைய பஸ் ஸ்டாண்ட், ரவுண்டானா, அம்பலப்புளி பஜார், சங்கரன்கோவில் முக்கு வழியாக புது பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள கருங்குளம் கண்மாயில் கரைக்கப்பட்டது. 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.* சாத்துாரில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்பட்டன.அண்ணா நகர், படந்தால், பால்பண்ணைத்தெரு, உள்பட 14 இடங்களில் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடந்தது.நேற்று அனைத்து சிலைகளும் முக்குராந்தல் கொண்டு வரப்பட்டு அங்கிருந்து ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக சென்றன.பின்னர் ஏழாயிரம்பண்ணை அருகே கீழச் செல்லையாபுரத்தில் உள்ள கல்குவாரியில் சிலைகள் கரைக்கப்பட்டன. விநாயகர் சிலை ஊர்வலத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.* ஸ்ரீவில்லிபுத்தூரில் ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது.முன்னதாக மாலை 4:00 மணிக்கு ராமகிருஷ்ணாபுரம் ஆனந்த விநாயகர் கோவில் அருகில் பொது கூட்டம் நடந்தது. பின்னர் மாலை 5:20 மணிக்கு ராமகிருஷ்ணா புரத்திலிருந்து ஊர்வலம் புறப்பட்டது. இதனை ஆர்.எஸ்.எஸ். பரியாவரன் அமைப்பு நிர்வாகி மாரிச்சாமி கொடியசைத்து துவக்கி வைத்தார். 27க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் நகரின் பல்வேறு வீதிகள் வழியாக வலம் வந்து திருவண்ணாமலை கோனேரி குளத்தில் கரைத்தனர்.டி.எஸ்.பி. ராஜா தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.