நீர் பறவைகள் கணக்கெடுப்பு துவக்கம்
ஸ்ரீவில்லிபுத்துார் : விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பகத்தின் சார்பில் நீர் பறவைகள் கணக்கெடுப்பு பணி நேற்று மாவட்டத்தில் 23 இடங்களில் துவங்கியது. இன்றும் நடக்கிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிந்த பின்பு ஆண்டுதோறும் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பறவைகள் கணக்கெடுப்பு நடப்பது வழக்கம். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் 20-க்கும் மேற்பட்ட இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, நேற்று முதல் கணக்கெடுப்பு துவங்கியது.மாவட்டத்தில் ராஜபாளையம் ஆறாவது மைல் நீர்த்தேக்கம், ஸ்ரீவில்லிபுத்தூரில் அத்திகுளம், பெரியகுளம், மொட்ட பெத்தான், செங்குளம், வத்திராயிருப்பு, புதுப்பட்டி கண்மாய்கள், பிளவக்கல் அணை, சுந்தரபாண்டியம் கண்மாய்கள், கீழ ராஜகுலராமன், ஆலங்குளம், வெம்பக்கோட்டை அணை, சிவகாசி பெரியகுளம், குல்லூர்சந்தை, விருதுநகர் பாலவனத்தம், அருப்புக்கோட்டை பெரியகுளம், வீரசோழன், நரிக்குடி, உலக்குடி, இருக்கன்குடி அணை ஆகிய 23 ஈர நிலங்களில் கணக்கெடுக்கும் பணியில் வனத்துறையினரும், தன்னார்வலர்களும் பங்கேற்றனர்.பைனாகுலர்கள் மூலம் தொலைதூரத்தில் உள்ள நீர்ப்பறவைகளை கண்டறிந்து அதனை பதிவு செய்தனர். இன்றும் கணக்கெடுப்பு நடக்கிறது. தன்னார்வர்கள் சேகரித்த தரவுகள் அடிப்படையில் உள்ளூர் மற்றும் வெளிநாடு நீர் பறவைகள் வருகை, எண்ணிக்கை விபரங்கள் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.