செங்கோட்டை-மயிலாடுதுறை ரயில் சோழவந்தானில் நிற்குமா
ஸ்ரீவில்லிபுத்தூர்: செங்கோட்டை - மயிலாடுதுறை இடையே இயங்கும் ரயில் மதுரை மாவட்டம் சோழவந்தான் ரயில்வே ஸ்டேஷனில் நின்று செல்ல வேண்டும் என தென் மாவட்ட பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.விருதுநகர், திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு நகரங்களில் வசிக்கும் மக்கள் மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியிலுள்ள திருவேடகநாதர், குருவித்துறை குருபகவான் உள்ளிட்ட கோயில்கள் மற்றும் பல்வேறு காரியங்களுக்காக கணிசமான அளவில் சென்று வருகின்றனர். தற்போது மதுரையில் இருந்து இயக்கப்படும் வைகை, கோவை, ஈரோடு, கோவை, குருவாயூர், பாலக்காடு ரயில்கள் சோழவந்தானில் நின்று செல்கின்றன.ஆனால் செங்கோட்டையில் இருந்து காலை 6:55 மணிக்கு புறப்பட்டு தென்காசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர் வழியாக மயிலாடுதுறை செல்லும் ரயில் சோழவந்தானில் நின்று செல்ல தெற்கு ரயில்வே நிர்வாகம் ஸ்டாப்பிங் வழங்கவில்லை. மறுமார்க்கத்தில் மயிலாடுதுறையில் இருந்து இந்த ரயிலில் வருபவர்கள் கொடை ரோடு ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி பஸ்சில் சோழவந்தான் வருகின்றனர்.எனவே, செங்கோட்டை- - மயிலாடுதுறை வழித்தடத்தில் இயங்கும் இந்த ரயில்கள் சோழவந்தான் ரயில்வே ஸ்டேஷனில் நின்று செல்ல தெற்கு ரயில்வே நிர்வாகம் ஸ்டாப்பிங் வழங்க வேண்டும் என தென் மாவட்ட பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.