காரியாபட்டி அரசு மருத்துவமனையில் 20 ஆண்டாக நிரப்பப்படாத லேப் டெக்னீசியன் பணியிடம்
காரியாபட்டி: காரியாபட்டி அரசு மருத்துவமனையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக லேப் டெக்னீசியன் இல்லாததால், மாற்றுப்பணியாக பணியாற்றி வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் காலி பணியிடத்தை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். காரியாபட்டி அரசு மருத்துவமனையில் தினமும் 600க்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள் வந்து செல்கின்றனர். மதுரை தூத்துக்குடி நான்கு வழி சாலை, கிராமப்புற சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் சிக்குபவர்களுக்கு டாக்டர்கள் பற்றாக்குறையால் முதல் உதவி அளித்து மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். ஆபத்தான சூழ்நிலையில் கொண்டு செல்லும் வழியில் பலர் உயிரிழக்க காரணமாக அமைகிறது.இது போன்ற பல்வேறு பிரச்னைகள் காரணமாக தேவையான டாக்டர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. இதையடுத்து 5 டாக்டர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, 3 டாக்டர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இரு டாக்டர்கள் டெப்டேஷனில் பணியாற்றி வருகின்றனர். அதேபோல் கிளர்க் கிடையாது. சம்பளம் ரெடி பண்ணுவதற்கு வெளியிலிருந்து ஆட்களை அழைத்து வர வேண்டி உள்ளது.இதை போல் 20 ஆண்டுகளுக்கு மேலாக லேப் டெக்னீசியன் பணியிடம் காலியாக இருந்து வருகிறது. அருப்புக்கோட்டை, திருச்சுழி உள்ளிட்ட மருத்துவமனையில் இருந்து டெக்னீசியன்கள் வந்து பணியாற்றி செல்கின்றனர். நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு, காரியாபட்டி அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.