தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3610 வழக்குகளுக்கு தீர்வு
ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்ட நீதிமன்றங்களில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3610 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ 14.03 கோடிக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் ஸ்ரீவில்லிபுத்துார் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திலும், விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, சிவகாசி, சாத்தூர், ராஜபாளையம் வட்ட சட்டப்பணி மையங்களிலும் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. இதில் நிலுவையில் உள்ள 7,294 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு அதில் 3 , 610 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.14 கோடியே 3 லட்சத்து 58 ஆயிரத்து 339க்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. இதில் ஸ்ரீவில்லிபுத்துார் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த மோட்டார வாகன விபத்தில் பாதிக்கப்பட்ட மலர்க்கொடி, காளி தேவி, அம்மாசிகனி, மாலதி ஆகியோருக்கு இழப்பீடு தொகையாக ரூ. 19 லட்சம் சமரச முறையில் பேசி முடிக்கப்பட்டு அதற்கான நகலினை முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமார் வழங்கினார்.