பட்டாசு விபத்தில் பலியாகும் தொழிலாளர் குழந்தைகளின் கல்விக்குரூ.5 கோடி ஒதுக்கீடு
நவ. 10ல் விருதுநகர் வந்த முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், பட்டாசு ஆலைகளில் ஏற்படும் விபத்துக்களில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குழந்தைகளுடைய உயர் கல்வி வரையிலான அனைத்து கல்வி செலவுகளையும் அரசே ஏற்கும். இந்த உதவிகளை மாவட்ட அளவிலேயே முடிவு செய்து வழங்க கூடிய வகையில் கலெக்டர் தலைமையில் இதற்கான தனி நிதியம் ஒன்று உருவாக்கப்படும் என்றும், இதற்கான முதற்கட்ட உதவியாக ரூ.5 கோடி ரூபாயை அரசு வழங்கும் என்றும் கூறினார்.இந்நிலையில் இதற்கு தற்போது தொழிலாளர் நலத்துறை செயலாளர் வீரராகவராவ் அரசாணை வெளியிட்டுள்ளார். இதில்பட்டாசு ஆலை விபத்துக்களில் மரணமடைந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் அரசின் கல்வி உதவி தொகை இத்திட்டத்தின் கீழ் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.4 ஆயிரம், பிளஸ் டூ தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.6 ஆயிரம், தாய், தந்தை இருவரில் எவரேனும் ஒருவர் மரணமடைந்த நிகழ்வில் பராமரிப்பு செலவினம் 18 வயது பூர்த்தியாகும் வரை மாதந்தோறும் ரூ.2 ஆயிரம், தாய், தந்தை இருவரும் மரணமடைந்த நிகழ்வில் பராமரிப்பு செலவினம் மாதந்தோறும் ரூ.4 ஆயிரம் வழங்கப்படும்.பொறியியல், தொழிற்படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்கள் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் செலுத்த வேண்டிய கட்டணம், தொழில்நுட்ப கல்வி செவிலியர், பிற டிப்ளமோ படிப்புகளுக்கு அதிகபட்சமாக ரூ.55 ஆயிரம், டிகிரி படிப்புக்கு அசல் கட்டணமாக அதிகபட்சம் ரூ.60 ஆயிரம் வரை வழங்கப்படும்.இதற்கு கலெக்டரை தலைவராக கொண்டு மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. எஸ்.பி., டி.ஆர்.ஓ., சி.இ.ஓ., கல்லுாரி பிரதிநிதிகள், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.இக்குழு கூர்ந்தாய்வு செய்து பயனாளிகளை தேர்வு செய்யும். இவ்வாறு தொழிலாளர் நலத்துறை செயலாளர் வீரராகவராவ் உத்தரவிட்டுள்ளார்.