ஆள்மாறாட்டம் மூலம் நிலத்தை அபகரிக்க முயன்ற 5 பேர் கைது
விருதுநகர்:விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ஆள்மாறாட்டம் செய்து நிலத்தை அபகரிக்க முயன்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர். சிவகாசி அனுப்பன்குளத்தில் பழனிசாமி, சுப்பையா ஆகியோரது பெயரில் 2 ஏக்கர் 59 சென்ட் நிலம் உள்ளது. இவர்களிடம் இருந்து நிலத்தை அனுப்பன்குளம் பேராப்பட்டி மேற்குத் தெருவைச் சேர்ந்த ஆனந்தராஜ் வாங்கி பத்திரப்பதிவு செய்வதற்காக சிவகாசி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்தார்.ஆனால் அலுவலகத்தில் பழனிசாமி பெயரில் ஆவண தாக்கல் செய்தவரின் உண்மையான பெயர் சிவக்குமார் என்பதும், சுப்பையா பெயரில் ஆவண தாக்கல் செய்தவரின் பெயர் கருப்பசாமி என்பதும் தெரிந்தது. இவர்களுக்கும் நிலத்திற்கும் சம்பந்தம் இல்லை என்பதும், ஆள்மாறாட்டம் நடந்திருப்பது கைரேகைகளை ஆதார் எண் உடன் ஒப்பிட்டு சரி பார்த்த போது உறுதியானது. இதையடுத்து ஆள்மாறாட்டம் செய்து போலி ஆதார் ஆவணங்களை தயார் செய்து நிலத்தை அபகரிக்க முயன்றவர்கள், அவர்களுக்கு உதவிபுரிந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சார்பதிவாளர் செந்தில்ராஜ்குமார் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து சிவகாசியைச் சேர்ந்த ஆனந்தராஜ், சிவக்குமார், கருப்பசாமி, செல்வமணி, மகாராஜன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.