உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சாத்துார் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பேர் பலி ஆலையின் உரிமம் ரத்து

சாத்துார் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பேர் பலி ஆலையின் உரிமம் ரத்து

சாத்துார்:விருதுநகர் மாவட்டம் சாத்துார் அருகே வீரார்பட்டி ஊராட்சி பொம்மையாபுரம் சாய்நாத் பயர் ஒர்க்ஸ் இன்டஸ்ட்ரீஸ் பட்டாசு ஆலையில் மணி மருந்து கலக்கும் போது உராய்வில் ஏற்பட்ட வெடிவிபத்தில் தொழிலாளர்கள் சிவக்குமார் 56, வேல்முருகன் 54, காமராஜ் 54, கண்ணன் 54, மீனாட்சி சுந்தரம் 46, நாகராஜ் 37, ஆகியோர் சம்பவயிடத்திலேயே பலியாகினர். மற்றொரு தொழிலாளர் முகமது சுதீன் காயமுற்றார். இதையடுத்து ஆலையின் உரிமம் ரத்து செய்யப்பட்டது.விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஆலமரத்துப்பட்டியைச் சேர்ந்தவர் பாலாஜி. இவருக்கு சொந்தமான சாய்நாத் பயர் ஓர்க்ஸ் இன்டஸ்ட்ரீஸ் பொம்மையாபுரத்தில் செயல்படுகிறது. இந்த ஆலை நாக்பூர் லைசென்ஸ் பெற்று 84 அறைகளுடன் பேன்சி ரக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது.

ஆறு பேர் பலி

ஆலையில் தொழிலாளர்கள் நேற்று காலை 8:30 மணிக்கு மணி மருந்து கலக்கும் போது உராய்வினால் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அறை முழுவதும் இடிந்து விழுந்தது. அருகே இருந்த சி.சி.டிவி., கேமரா அறை சேதமானது.இந்த கோர விபத்தில் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சிவக்குமார், மீனாட்சிசுந்தரம், குருந்தமடத்தைச் சேர்ந்த வேல்முருகன், காமராஜ், வீரார்பட்டியைச் சேர்ந்த கண்ணன், செட்டிக்குறிச்சியைச் சேர்ந்த நாகராஜ் ஆகியோர் சம்பவயிடத்திலேயே பலியாகினர். மேலும் படுகாயமடைந்த ஆவுடையாபுரத்தைச் சேர்ந்த முகமது சுதீன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இந்த வெடி விபத்தில் கட்டட இடிபாடுகள் அருகே இருந்த விளைநிலத்தில் விழுந்தன. விருதுநகர், சாத்துார் தீயணைப்புத் துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். வெடி விபத்து நடந்த இடத்தை (பொறுப்பு) எஸ்.பி., அரவிந்த் ஆய்வு செய்தார்.விபத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு நிவாரணமாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என உறவினர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

உள் குத்தகையே காரணம்

சிவகாசியைச் சேர்ந்த சசிபாலன் என்பவர் வெடி விபத்து நிகழ்ந்த பட்டாசு தயாரிப்பு ஆலையை உள் குத்தகைக்கு எடுத்து நடத்தியுள்ளார். ஆலையின் லைசென்ஸ் பெயரை கூட மாற்றாமல் அதிக அளவிலான பேன்சி ரக பட்டாசுகளை தயாரிக்கும் பணியில் தொழிலாளர்களை ஈடுபடுத்தியுள்ளார் என்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

இருவர் கைது

ஆலை உரிமையாளர்கள் பாலாஜி, உள்வாடகைக்கு எடுத்த சசிபாலன், அவரது மனைவி நிரஞ்சனாதேவி, போர்மேன்கள் கணேசன் 39, பிரகாஷ், பாண்டியராஜ், மேற்பார்வையாளர் சதீஷ்குமார் 24, ஆகியோர் மீது வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்கு பதிந்தனர். இதில் கணேசன், சதீஷ்குமார் கைது செய்யப்பட்டனர்.

அனுபவம் இல்லாத தொழிலாளர்கள்

பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு முன்அனுபவம் கிடையாது. மாற்றுப்பணி செய்தவர்களை அழைத்து வந்து ஒரு வாரமாக பணியில் ஈடுபடுத்தியுள்ளனர். இவர்களுக்கு பட்டாசு தயாரிப்பு குறித்தும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் எந்த பயிற்சியும் வழங்கப்படாததும் விபத்திற்கு காரணமானது என மற்ற தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

ஆலையின் உரிமம் ரத்து

வெடி விபத்தையடுத்து சாய்நாத் பயர் ஓர்க்ஸ் இன்டஸ்ட்ரீஸ் ஆலையின் உரிமம் மறு உத்தரவு வரும் வரை தற்காலிமாக ரத்து செய்யப்படுகிறது என டி.ஆர்.ஓ., ராஜேந்திரன் உத்தரவிட்டார். விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியான 6 பேரின் உடல்களும் வைக்கப்பட்டுள்ளது. கலெக்டர் ஜெயசீலன் பலியானோரின் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் கூறினார். பின் கலெக்டர் கூறுகையில், ''பட்டாசு ஆலை வெடிவிபத்தில் மனித தவறுகளால் விபத்து ஏற்பட்டுள்ளது என போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதற்கு காரணமானவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,'' என்றார்.

நிவாரணம் அறிவிப்பு

பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியான 6 பேரின் குடும்பத்துக்கும் தலா ரூ. 4 லட்சமும், காயமடைந்தவருக்கு ரூ. ஒரு லட்சமும் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

47 பேர் பலி

விருதுநகர் மாவட்டத்தில் 2024ம் ஆண்டில் பட்டாசு தயாரிப்பில் 12 வெடி விபத்துக்கள் நடந்தன. இதில் 47 பேர் பலியாகி உள்ளனர். 27 பேர் காயமடைந்தனர். 2025 புத்தாண்டு துவங்கி நான்கு நாட்களேயான நிலையில் தற்போது வெடி விபத்தில் 6 பேர் பலியாகியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி