மாவட்டத்தில் காலை உணவு திட்டத்தால் 69 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர்
அருப்புக்கோட்டை; ''மாவட்டத்தில் ஆயிரத்து 200 பள்ளிகளில் 69 ஆயிரத்து 333 மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.', அரசு உதவி பெறும் பள்ளியான அருப்புக்கோட்டை எஸ். பி. கே., துவக்கப்பள்ளியில் நடந்த காலை உணவு திட்ட துவக்க விழாவில் அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் பேசினார். விழாவில் கலெக்டர் சுகபுத்ரா தலைமை வகித்தார். அருப்புக்கோட்டை நாடார் உறவின்முறை தலைவர் சுதாகர், எஸ்.பி.கே., ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயலர் காசிமுருகன் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியை துவக்கி வைத்து அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசியதாவது: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 9 பேரூராட்சி பகுதிகளில் 32 பள்ளிகளில் 3 ஆயிரத்து 188 மாணவர்களுக்கும், சிவகாசி மாநகராட்சி பகுதியில் 11 பள்ளிகளில் 4 ஆயிரத்து 982 மாணவர்களுக்கும், 5 நகராட்சி பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் 101 பள்ளிகளில் 15 ஆயிரத்து 072 மாணவர்களுக்கும், மொத்தம் 23 ஆயிரத்து 472 மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கப்பட உள்ளது. தற்போது மாவட்டத்தில் மொத்தம் ஆயிரத்து 200 பள்ளிகளில் 69 ஆயிரத்து 333 மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று பேசினார். வருவாய் துறை மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்ட னர்.