உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / 80 சதவீதம் பட்டாசு விபத்துக்கள் மனித தவறுகளால் தான் நடக்கிறது தொழிலக பாதுகாப்பு இயக்குனர் தகவல் 

80 சதவீதம் பட்டாசு விபத்துக்கள் மனித தவறுகளால் தான் நடக்கிறது தொழிலக பாதுகாப்பு இயக்குனர் தகவல் 

விருதுநகர்: 80 சதவீதம் பட்டாசு விபத்துக்கள் மனித தவறுகளால் தான் நடக்கிறது என விருதுநகரில் தொழிலக பாதுகாப்பு இயக்குனர் ஆனந்த் பேசினார்.விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்கம் சார்பில் பட்டாசு ஆலைகளில் நிகழும் விபத்துக்களை தடுப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் அதன் இயக்குநர் ஆனந்த் தலைமையில் நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் முன்னிலை வகித்தார். தொழிற்சாலை பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த பாதுகாப்பு கையேடு வெளியிடப்பட்டது.தொழிலக பாதுகாப்பு இயக்குநர் பேசியதாவது: தமிழகத்தில் 1570 பட்டாசு ஆலைகள் உள்ளன. அதில் விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 1101 உரிமம் பெற்ற பட்டாசு ஆலைகள் உள்ளன. 2023ல் பட்டாசு ஆலை விபத்தில் தமிழகத்தில் 27 விபத்துக்களில் 79 தொழிலாளர்கள் இறந்துள்ளனர். அதில் விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 15 விபத்துக்களில் 28 தொழிலாளர்கள் இறந்துள்ளனர். 2024 ம் ஆண்டில் தமிழகத்தில் ஏற்பட்ட 17 விபத்துக்களில் 52 தொழிலாளர்கள் இறந்துள்ளனர். அதில் விருதுநகர் மாவட்டத்தில் 12 விபத்துகளில் 42 பேர் இறந்துள்ளனர்.அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக ரசாயனங்களை பயன்படுத்துவதாலும், அதிகமான நபர்களை பணிக்கு அமர்த்துவதாலும் ரசாயனங்கள் நீர்த்து போவதாலும், ரசாயனங்களை கலவை செய்யும் போதும், உராய்வு, அதிர்ச்சி, இரும்பால் ஆன பொருட்கள் மூலமாகவும் அதிக விபத்துகள் ஏற்பட்டுள்ளது. 80 சதவீதம் விபத்துக்கள் மனித தவறுகளால் தான் ஏற்படுகிறது, என்றார்.டி.ஆர்.ஓ., ராஜேந்திரன், சிவகாசி சப் கலெக்டர் ப்ரியா ரவிச்சந்திரன், தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்கக கூடுதல் இயக்குனர்கள் ராஜசேகரன், பிரேமகுமாரி, துணை வெடிப்பொருள் கட்டுப்பாட்டு அலுவலர் ரவிக்குமார், ஆலை உரிமையாளர்கள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ