ரோட்டில் குழாய் உடைந்து பீய்ச்சி அடித்த குடிநீர்
அருப்புக்கோட்டை: அருப்புகோட்டை அருகே பாலையம்பட்டி மெயின் ரோட்டில் தாமிரபரணி பகிர்மான குழாய் உடைந்து தண்ணீர் பீய்ச்சி அடித்தது. அருப்புக்கோட்டை, சுற்றியுள்ள கிராமங்களுக்கு தாமிரபரணி குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி, அதனை சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட புறநகர் பகுதிகளுக்கு தாமிரபரணி குடிநீர் மேல்நிலை தொட்டியில் சேகரம் செய்யப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. நேற்று அதிகாலையில் அருப்புக்கோட்டை - பாலையம்பட்டி ரோட்டில் குடிநீர் பகிர்மான குழாய் உடைந்து தண்ணீர் அருவி போல் பீய்ச்சி அடித்தது. இதில் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாகியதுடன் அந்தப் பகுதி முழுவதும் வெள்ளக்காடாக ஆனது. ஏற்கனவே குடிநீர் 10 நாளைக்கு ஒருமுறைதான் விநியோகம் செய்யப்படுகிறது. இதில் பகிர்மான குழாய் உடைந்து குடிநீர் ரோட்டில் ஓடியது. குடிநீர் வடிகால் வாரியத்தினர் உடைந்த குழாய்களை உடனுக்குடன் சரி செய்து தடைபடாத குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.