உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தொடருது பட்டாசு ஆலைகளில் விபத்து: முன்னெச்சரிக்கை தேவை

தொடருது பட்டாசு ஆலைகளில் விபத்து: முன்னெச்சரிக்கை தேவை

விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், சிவகாசி, வெம்பக்கோட்டை, சாத்துார் சுற்றுப்பகுதியில் நாக்பூர், டி.ஆர்.ஓ., சென்னை உரிமம் பெற்ற 1080 பட்டாசு ஆலைகள் உள்ளன. பட்டாசு ஆலைகளை குத்தகைக்கு விடுவதாலும் விதிகள் மீறப்படுவதாலும் வெடி விபத்து ஏற்படுவது ஒரு பக்கம் இருக்க ஆலைகளில் மணி மருந்து இருப்பு வைப்பதால் தொடர்ந்து வெடி விபத்து ஏற்படுகிறது. பொதுவாக பட்டாசு ஆலைகளில் பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களான மருந்து கலவைகளை இருப்பு வைக்காமல் அன்றே காலி செய்ய வேண்டும்.மறுநாள் பட்டாசு உற்பத்தி பணி துவங்கும் போது புதிய மருந்துகள் கொண்டு வர வேண்டும். ஆனால் இந்த விதி காற்றில் பறக்க விடப்பட்டு ஒரு சில பட்டாசு ஆலைகளில் மணி மருந்துகள் இருப்பு வைக்கப்படுகின்றது. இது போல் பட்டாசு ஆலைகளில் முதல் நாள் இருப்பு வைக்கப்படும் மணி மருந்துகளால் விபத்து ஏற்படுகிறது. மணி மருந்து இருப்பு வைக்கும் போது வேதியியல் மாற்றத்தினால் நீர்த்து வெடி விபத்து ஏற்படுகிறது. மேலும் மருந்தில் பல்லி, எலி போன்றவை நடமாடும்போது உராய்வு ஏற்பட்டு ஆலைகளில் வெடி விபத்து ஏற்பட்ட வரலாறும் ஒன்று.நேற்று முன்தினம் சிவகாசி அருகே அம்மா பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் மணி மருந்து இருப்பு வைக்கப்பட்டிருந்ததால் வெடி விபத்து ஏற்பட்டது அதிர்ஷ்டவசமாக விடுமுறை நாள் என்பதால் உயிரிழப்பு இல்லை. இதேபோல் கடந்த காலங்களில் ஏழாயிரம் பண்ணை அருகே உள்ள பட்டாசு ஆலையில் மணி மருந்து இருப்பு வைக்கப்பட்ட அறையை திறந்த போது ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் பலியானார். நாரணாபுரம் புதுார், செங்கமலப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பட்டாசு ஆலைகளில் முதல் நாள் இருப்பு வைக்கப்பட்டிருந்த மணி மருந்து வைக்கப்பட்டிருந்த அறையை திறக்கும்போது வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. சில ஆலைகளில் மருந்து வைக்கப்பட்டிருந்த அன்றே விபத்து நடந்தது உண்டு.எனவே பட்டாசு ஆலைகளில் பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களான மருந்து கலவைகளை அன்றே காலி செய்ய வேண்டும். இருப்பு வைக்கக்கூடாது. மறுநாள் பட்டாசு உற்பத்தி பணி துவங்கும்போது புதிய மருந்துகள் கொண்டு வர வேண்டும். இதுபோன்ற தவறினால் விபத்து ஏற்படும் என தெரிந்தும் சில பட்டாசு ஆலைகளின் உரிமையாளர்கள் தொடர்ந்து இதே தவறை செய்கின்றனர். பட்டாசு உற்பத்தி நடைபெறும் போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்படுவது உண்டு. ஆனால் விபத்து ஏற்படும் என தெரிந்தும் இது போன்ற செயலில் ஈடுபடும் ஆலைகளை அதிகாரிகள் ஆய்வு செய்து கடும் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

veeramani
மே 27, 2025 11:22

விருதுநகர் மாவட்டம் சிவகாசி வெடி மருந்து விபத்துகள் .... அங்கு இ ங்கு சிதறிக்கிடக்கும் பட்டாசு தொழிற்சாலைகளை கி ளஸ்ட்டர் போல ஊர்களுக்கு ஒதுக்கு புறமாக சுமார் ஐந்து கிலோமீட்டர் தள்ளி நிறுவலாம். இதில் சுமார் 80-120தொழில்குடங்கள் அமைக்கலாம். வெடிமருந்து மீட்ந்துவிட்டால் அதை பாதுகாப்பாக ஒரு பொது லாக்கர் போன்ற அமைப்பில் சேமித்து வைக்க கலாம் . அங்கேயே முதல் உதவி மய்யம் வைக்கலாம் . தோழி வேலை செய்பவர்களை பேருந்து முலாம் கூட்டிவரலாம். மதுரையில் அன்றையநாட்களில் இயங்கி வந்த எலெக்ட்ரோபிளாட்டிங் தொழிற்சாலைகளை கரிசல்குளம் அருகே சுமார் 40ஏக்கர் நிலம் வாங்கி அனைத்து யூனிட்களையும் ஆற்றி தற்போது மாசு கட்டுப்பாடுடன் நடத்திவருகிறோம். மதுரை பசுமை பத்துறையாக மாற்றப்பட்டது. மனித உயிர் பாதுகாப்பு நிச்சயம் தேவை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை