குற்றப்பிரிவுக்கு திருப்பி அனுப்பப்படும் ராஜேந்திர பாலாஜி மீதான கூடுதல் குற்றப்பத்திரிகைகள் * ஊழல் தடுப்பு நீதிமன்றத்திற்கு வழக்கு மாற வாய்ப்பு
ஸ்ரீவில்லிபுத்துார்:அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான பண மோசடி வழக்கில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ஸ்ரீவில்லிபுத்துார் மக்கள் பிரதிநிதிகள் மீதான புகார்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிக்கைகள் அதே போலீசாருக்கு மீண்டும் திருப்பி அனுப்பப்படும் நிலை எழுந்துள்ளது. இதனால் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு இவ்வழக்கு மாற்றப்பட வாய்ப்புள்ளது.விருதுநகர் மாவட்டம் சாத்துாரைச் சேர்ந்தவர் ரவீந்திரன். இவரது சகோதரி மகனுக்கு ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி அ.தி.மு.க., நிர்வாகி விஜய நல்லதம்பி, ரூ.30 லட்சம் வாங்கி விட்டு அதனை திருப்பித் தராமல் ஏமாற்றியதாக 2021ல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது. விஜய் நல்லதம்பி, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, மாரியப்பன் ஆகியோர் மீது ஒரு வழக்கும், ராஜேந்திர பாலாஜி தன்னிடம் பணம் வாங்கிவிட்டு ஏமாற்றி விட்டதாக விஜய் நல்லதம்பி கொடுத்த புகாரில் ராஜேந்திர பாலாஜி, உதவியாளர் பாபுராஜ், நண்பர்கள் பலராமன், முத்துப்பாண்டி ஆகியோர் மீது மற்றொரு வழக்கும் குற்றப்பிரிவு போலீசாரால் பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்குகளில் ராஜேந்திர பாலாஜியை 2022 ஜன.,5 கர்நாடக மாநிலம் ஹாஷனில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.2023 ஜனவரியில் அப்போதைய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராதிகா ஸ்ரீவில்லிபுத்துார் மக்கள் பிரதிநிதிகள் மீதான புகார்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இவ்வழக்குகளில் குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்தார். ஆனால் ராஜேந்திர பாலாஜி மீதான புகாரை ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி நீதிபதி வள்ளிமணாளன் கூறி, 2023 மார்ச்சில் உத்தரவிட்டார். அதன்படி ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரே விசாரணை நடத்தினர்.இந்நிலையில் விரைந்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் ரவீந்திரன் வழக்கு தொடர்ந்தார். குற்றப்பிரிவு போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காததால் வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை எதிர்த்து ராஜேந்திர பாலாஜி, தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. சி.பி.ஐ., விசாரணைக்கு தடை விதித்தவுடன், ராஜேந்திர பாலாஜியை விசாரணைக்கு உட்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு சமர்ப்பித்த கோப்பின் மீது கவர்னர் உடனடியாக முடிவு எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.இந்நிலையில் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் அனுமதி வழங்கினார். இதனையடுத்து ஏப்.,15 இரவே ஆன்லைன் மூலம் இ-பைலிங் முறையில் ஸ்ரீவில்லிபுத்துார் மக்கள் பிரதிநிதிகள் மீதான புகார்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் 600 பக்கங்கள் கொண்ட 2 கூடுதல் குற்றப்பத்திரிகைகளை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தாக்கல் செய்தனர். நீதிமன்ற ஆய்வுக்கு பிறகு நம்பர் இடப்பட்டு விரைவில் இவ்வழக்குகள் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.இந்நிலையில் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் இவ்வழக்குகளை தற்போதைய மக்கள் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்க உகந்தது இல்லை எனக்கூறி குற்றப்பிரிவு போலீசிற்கு திருப்பி அனுப்பப்படும் நிலை எழுந்துள்ளது. இவ்வழக்குளை சி.பி.ஐ., வசம் ஒப்படைக்கும்படி பிறப்பித்த உத்தரவை மாற்றி அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்ட நிலையில் இந்த வழக்குகள் எந்த நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் என கேள்விக்குறியும் எழுந்துள்ளது.ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் ஸ்ரீவில்லிபுத்துார் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்படுமா என்ற நிலை உருவாகியுள்ளது.