வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் கூடுதல் மகப்பேறு டாக்டர்கள் நியமனம்
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சுற்றுவட்டார கிராம பெண்களின் மகப்பேறு வசதிக்காக கூடுதலாக மகப்பேறு மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் எக்ஸ்ரே வசதியும் செய்யப்பட்டுள்ளது.தனித்தாலுகாவான வத்திராயிருப்பில் 4 பேரூராட்சிகள், 27 ஊராட்சிகளில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இதில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மக்கள் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வருகின்றனர்.இங்கு தினமும் 500-க்கும் மேற்பட்ட வெளி நோயாளிகளும், 70-க்கும் மேற்பட்ட உள் நோயாளிகளும், மழை காலங்களில் ஆயிரம் பேர் வரை சிகிச்சை பெறுகின்றனர். இந்த மருத்துவமனையில் தலைமை டாக்டர் உட்பட 10 டாக்டர்கள் பணியாற்ற வேண்டிய நிலையில் போதிய மகப்பேறு டாக்டர்கள் இல்லாமல் பிரசவம், உயிர்காக்கும் சிகிச்சைக்கு ஸ்ரீவில்லிபுத்துார், விருதுநகர் மருத்துவமனைக்கு மக்கள் செல்ல வேண்டிய நிலை இருந்தது.இந்த மருத்துவமனையில் கூடுதல் வசதி செய்து தரவும், போதிய டாக்டர்கள் நியமிக்கவும் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் மகப்பேறு மருத்துவத்திற்காக கூடுதலாக ஒரு பெண் டாக்டரும், எலும்பு முறிவு, பொது மருத்துவம், காது, மூக்கு, தொண்டை குழந்தைகள் நலன் ஆகியோருக்காக சிறப்பு டாக்டர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் வத்திராயிருப்பு மக்கள் வெளியூர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற அலைய வேண்டிய நிலை குறையும்.இந்நிலையில் நேற்று முன் தினம் முதல் எக்ஸ்ரே வசதியும் செய்யப்பட்டுள்ளது.