ஆதிதிராவிட நலத்துறை விடுதிகளில் வரவேற்பு தொகுப்பு வழங்காது இழுத்தடிப்பு
விருதுநகர், : விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் ஆதிதிராவிட நலத்துறை விடுதிகளில் 2024-25 கல்வியாண்டில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு வரவேற்பு தொகுப்பு வழங்காது இழுத்தடித்து வருகின்றனர்.தமிழக அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் நடத்தப்பட்டு வரும் பள்ளி, கல்லுாரி மாணவர் விடுதிகளில் 2024-25ம் கல்வியாண்டில் சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு வரவேற்கும் விதமாக பாயுடன் கூடிய மெத்தை, போர்வை ஆகிய அடங்கிய வரவேற்பு தொகுப்பு வழங்கப்படும். அனைத்து மாவட்டங்களிலும் இந்த தொகுப்பு மாணவர்களுக்கு கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் வழங்கி முடிக்கப்பட்டு விட்டன. ஆனால் விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் தமிழக அரசு வழங்கிய இத்தொகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படாமல் இருந்து வருகிறது. மாவட்டத்தில் 55 விடுதிகள் உள்ளன. மாவட்ட அதிகாரி கூறுகையில், “12 விடுதிகளுக்கான வரவேற்பு தொகுப்பு மட்டும் வந்துள்ளது. முழுதாக வந்ததும் வழங்க வைத்துள்ளோம்,” என்றார்.இதே போல விடுதி மாணவர்களுக்கு வழங்கப்படும் முடிவெட்டு கூலி, சோப்பு, எண்ணெய் உள்ளிட்டவற்றிற்கான பணமும் மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் கல்வியாண்டு முடியவுள்ள நிலையில் மாணவர்களுக்கு தேவையான வரவேற்பு தொகுப்பு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.