வேளாண் துறை விதைகள் முளைக்காததால் தவிப்பு; நடவுக்கு பின் புலம்பும் விவசாயிகள்
அரசு வேளாண் துறைகள் மூலம் விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களில் மானிய விலையில் விதைகள் வழங்கப்படுகின்றன. சோளம், கம்பு, மக்காச் சோளம், குதிரைவாலி, கடலை, உளுந்து, பாசி பயறு, சூரியகாந்தி, நெல் உள்ளிட்ட பயிர்களுக்கான விதைகள் விநியோகம் செய்யப்படுவதாக அந்தந்த பகுதிகளில் உள்ள அரசு வேளாண் விரிவாக்க மையங்கள் அறிவிக்கின்றன.மானியத்தில் விதைகளைப் பெற்ற விவசாயிகள் அவற்றை நிலத்தில் விதைக்கின்றனர். விதைத்து முளை விடும் காலத்தில் பயிர்கள் முளைப்பதில்லை. ஒரு சில பயிர்கள் முளைத்து, வளர்ந்து செடியாக வந்து பூ பூப்பதுடன் நின்று விடுகிறது. இன்னும் சில முளைத்து வந்தாலும் பயிர்கள் திரட்சியாக கிடைப்பது இல்லை. இதனால், விவசாயிகள் தாங்கள் உழைத்த உழைப்பு, பயிர்களுக்கு உரம், மருந்து தெளித்த செலவுகள் வீணாகி விட்டதில் விரக்தி அடைந்துள்ளனர்.அரசு வழங்கிய சூரியகாந்தி விதை அருப்புக்கோட்டை புளியம்பட்டி, ஆத்திபட்டி, வெள்ளையாபுரம், மீனாட்சிபுரம் உட்பட பல கிராமங்களில் விதைக்கப்பட்டு உள்ளது. பூ மட்டும் நன்கு பூத்துள்ளது. அதில் விதைகள் திரட்சியாக இல்லை. இதனால் விவசாயிகள் எதிர்பார்த்த அளவு சாகுபடி செய்ய முடியவில்லை.அரசு மானிய விலையில் வழங்கப்படும் விதைகளை பருவ காலத்திற்கு ஏற்ப, அந்தந்த ஊர்களின் மண்ணின் தன்மைக்கு ஏற்ப வழங்குவதில்லை. வெளி மாவட்டங்கள், வட மாநிலங்களில் விதைகளை மொத்தமாக கொள்முதல் செய்து அதை விவசாயிகளுக்கு பருவம் தவறி வழங்கியும், மண்ணின் தன்மைக்கு ஏற்ப விதைகளை வழங்காததாலும் விவசாயிகள் மானிய விலையில் கொடுத்தாலும் அரசு விதைகளை வாங்க தயங்குகின்றனர்.வேளாண் துறைகளில் கடமைக்கு விதைகளை வழங்குகின்றன. வழங்கப்படும் விதைகளில் நீர்ச்சத்து உயிர்ச்சத்து எதுவும் இருப்பது இல்லை. இதனால் விதைகளில் முளைப்பு திறன் குறைவாக உள்ளது என விவசாயிகள் புலம்புகின்றனர்.இயற்கை பேரிடர்கள், விலங்குகளின் தொல்லை என பல்வேறு இடர்பாடுகளை சந்தித்து வரும் விவசாயிகள் விவசாயத்தை காப்பாற்ற போராடி வருகின்றனர். இதனால் விவசாயிகள் தாங்கள் விவசாயம் செய்யும் நிலப்பரப்புகளை குறைத்துக் கொண்டே வருகின்றனர். அரசின் வேளாண் துறைகள் விவசாயிகள் நலனில் அக்கறை கொண்டு தரமான விதைகள், மருந்துகள், உரங்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.