கரும்புகளை பிற மாவட்ட ஆலைகளுக்கு அனுப்ப அனுமதியுங்க: நிலுவை தொகை கிடைக்காத விவசாயிகள் விருப்பம்
விருதுநகர்: பழைய கரும்பு தொகை முழுவதையும் தரணி சர்க்கரை ஆலை வழங்கிய பின்பு, அங்கு அனுப்ப உத்தரவிடுமாறும், அதுவரை எங்களது கரும்புகள் சிவகங்கை, தேனி மாவட்ட 2 சர்க்கரை ஆலைகளுக்கும் அரவைக்கு செல்ல அனுமதிக்க விருதுநகர், தென்காசி மாவட்ட விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.நிதி நெருக்கடியின் காரணமாக தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லுார் தரணி சர்க்கரை ஆலை, தனது அரவையை 2021ல் நிறுத்தியது. அந்த ஆண்டு பதிவு செய்த கரும்புகள் சிவகங்கை, தேனி மாவட்டங்களில் உள்ள இரு சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்பப்பட்டது. மூன்று ஆண்டுகளாக இரு ஆலைகளுக்கு அனுப்பப்பட்டு வந்தது. 2024 ஜூன் முதல் தரணி சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பாக்கி தொகைகள் முழுவதையும் வழங்கிவிடுவதாகவும், 2025ல் தனது அரவையை துவங்க உள்ளதாகவும் கூறினர். இதனடிப்படையில் சிவகங்கை, தேனி மாவட்ட சர்க்கரை ஆலைகள் விருதுநகர், தென்காசி மாவட்ட பகுதிகளில் அரவை நிறுத்திவிட்டு கரும்பு பதிவுகளையும் ரத்து செய்தனர். தற்போது தரணி சர்க்கரை ஆலை அறிவித்தது போல் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பாக்கி தொகை முழுவதையும் நவம்பர் மாத இறுதிக்குள் கொடுத்து முடிக்க வேண்டும். ஆனால் 50 சதவீத தொகை மட்டும் கொடுக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். மீதமுள்ள தொகை எப்போது கொடுக்கப்படும் என எந்த உறுதிப்பாடும் இல்லாததால் மீண்டும் தங்களது கரும்புகளை வரும் 2025 அரவைக்கு அனுப்ப மறுத்து வருகின்றனர்.தமிழக விவசாயிகள் சங்க விருதுநகர் மாவட்ட தலைவர் ராமச்சந்திரராஜா, சர்க்கரைத்துறை இயக்குனர், கரும்பு ஆணையாளருக்கு அனுப்பிய மனுவில் கூறியதாவது: ஜூன் மாதம் வரை இயங்கி வந்த இரு சர்க்கரை ஆலைகளும் நவம்பர் மாதம் முதல் அறுவடை செயல்பட்டு வந்த கரும்புகளை பதிவு செய்துள்ளது. இக்கரும்புகள் நவம்பர் மாதம் துவங்கி அறுவடைக்கு முதிர்ச்சியடைந்து தயாராகி விடும் நிலையில் இந்த கரும்புகளை நாங்கள் எங்கு பதிவு செய்து அனுப்புவது என்ற குழப்ப நிலையில் இருக்கிறோம். இச்சூழ்நிலை நீடிக்கும் பட்சத்தில் பிப்ரவரி மார்ச், மாதத்தில் பதிவு செய்யப்பட்ட கரும்புகளை காலத்தில் வெட்ட முடியாமல் தேக்க நிலை உருவாகும். எனவே இந்த விஷயத்தில் அரசு உடனடியாக தலையிட்டு நவம்பர் முதல் மார்ச் வரை பதிவு செய்த கரும்புகளை டிசம்பர் துவங்கி அறுவடை செய்து அருகில் உள்ள சிவகங்கை, தேனி மாவட்ட தனியார் ஆலைகளுக்கும் வழங்க உத்தரவிட்டு விவசாயிகள் நலன் காக்க வேண்டுகிறோம், என்றார்.