வாகன ஆக்கிரமிப்புகளால் ஆம்புலன்ஸ் நிறுத்த வழியில்லை
விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் ரோட்டில் நிறுத்தப்படும் வாகனங்களால் ஆம்புலன்ஸ்கள் செல்வதிலும், நிறுத்துவதிலும் சிரமம் ஏற்படுகிறது. இதனால் ஆம்புலன்ஸ்கள் சித்த மருத்துவ பிரிவுக்கு அருகே நிறுத்தி வைக்கும் நிலையே தொடர்கிறது. விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையில் இங்கு உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுபவர்களை பார்ப்பதற்காகவும், வெளிநோயாளிகளாக சிகிச்சை பெறுவதற்காகவும் தினமும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இவர்கள் கொண்டு வரும் வாகனங்களை மருத்துவமனை வளாகத்தில் நிறுத்துகின்றனர். மேலும் மருத்துவ பணியாளர்கள், டாக்டர்களின் வாகனங்கள் தரைதளத்தில் அமைக்கப்பட்ட பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்படுகிறது. ஆனால் வார வேலை நாட்களில் மருத்துவமனை வளாகத்தில் அதிகப்படியான வாகனங்கள் வளாகத்திற்குள் நிறுத்துவதால் ஆம்புலன்ஸ்களை நிறுத்த முடிவதில்லை. இதனால் ஆம்புலன்ஸ்கள், வாகனங்கள் முன்னேறி செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. இயக்கம் இல்லாத நேரத்தில் ஆம்புலன்ஸ்கள் சித்த மருத்துவ பிரிவுக்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டாலும் வளாகத்திற்குள் சென்று வருவதில் சிக்கல் உள்ளது. எனவே மருத்துவமனை வளாகத்திற்குள் கார்கள், வாகனங்களால் ஏற்படும் சிரமத்தை போக்கவும், ஆம்புலன்ஸ் சிரமமின்றி வளாகத்தில் சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.