ஸ்ரீவில்லிபுத்துாரில் இன்று ஆண்டாள் திருக்கல்யாணம்
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று மாலை 5:30 மணிக்கு ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. இதனை முன்னிட்டு நேற்று மாலை திருப்பதியில் இருந்து ஆண்டாளுக்கு பட்டு , மங்கலப் பொருட்கள் கொண்டு வரப்பட்டது.இக்கோயிலில் ஏப்.3ல் கொடியேற்றத்துடன் திருக்கல்யாண திருவிழா துவங்கியது. ஒன்பதாம் திருநாளான இன்று (ஏப்.11)காலை 7:05 மணிக்கு செப்பு தேரோட்டமும், மாலை 5:30 மணிக்கு ஆடிப்பூர பந்தலில் ஆண்டாள், ரெங்க மன்னார் திருக்கல்யாணமும் நடக்கிறது.அப்போது ஆண்டாளுக்கு சாற்றுவதற்காக திருமலை திருப்பதி சீனிவாச பெருமாள் கோயிலில் இருந்து நேற்று மாலை 5:45 மணிக்கு மாலை, பட்டு, மங்கலப் பொருட்களை கரூவூல அலுவலர் ஸ்ரீமத்கிரி தலைமையிலான குழுவினர் கொண்டு வந்தனர். அறங்காவலர் மனோகரன், செயல்அலுவலர் சர்க்கரையம்மாள் ,கோயில் பட்டர்கள் எதிர்கொண்டு வரவேற்றனர். பின்னர் மாடவீதிகள் சுற்றி வந்து ஆண்டாள் சன்னதியில் பட்டு சமர்ப்பிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.இன்று மாலை நடக்கும் திருமணத்தின் போது ஆண்டாளுக்கு இந்த பட்டு சாற்றப்படுகிறது.விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ராமராஜா தலைமையில் கோயில் பட்டர்கள், அறநிலையத்துறையினர் செய்துள்ளனர்.