பணிக்கு வருடாந்திர நியமன உத்தரவு
விருதுநகர்: மாவட்டங்களுக்கு இடையேயான ஊதிய முரண்பாடு களைந்திட வேண்டும். பணிக்கு மாதாந்திர நியமன உத்தரவை, வருடாந்திர நியமன உத்தரவாக மாற்றி வழங்க வேண்டும் என விருதுநகரில் தமிழ்நாடு கொசுப்புழு ஒழிப்பு மஸ்துார் சங்க மாநிலத் தலைவர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: 2012ல் நியமிக்கப்பட்ட மஸ்துார் பணியாளர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும். இவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் மாவட்டங்களுக்கு இடையே உள்ள முரண்பாட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.பொதுத்துறையில் பணிபுரிந்து கொண்டு ஒன்றியத்தில் ஊதியம் பெறும் பணியாளர்களை சுகாதாரத்துறையின் கீழ் கொண்டு வர வேண்டும். மாத ஊதியம் 5ம் தேதிக்குள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.பணியாளர்களுக்கு அடையாள அட்டை கட்டாயம் வழங்க வேண்டும். நியமனத்தில் அரசியல் தலையீட்டை தடுக்க வேண்டும். இவர்களுக்கான பணி நியமன உத்தரவு மாதந்தோறும் வழங்கப்படுகிறது. இதனால் தொடர் பணி கிடைக்காமல் பணியாளர்களின் குடும்பங்கள் பாதிக்கப்படுவதை தடுக்க வருடாந்திர பணி நியமன உத்தரவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் வாக்குறுதியான மஸ்துார் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படும் என தெரிவித்தும் இதுவரை கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.இது குறித்து மாநில செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவில் மார்ச் 18ல் அஞ்சல் அட்டை இயக்கம் மூலம் முதல்வர் முகவரிக்கு கோரிக்கைகளை எழுதி அனுப்பும் போராட்டம் நடத்தவும், அதன் பின் மார்ச் 25ல் மாவட்ட தலை நகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம், ஏப்.25ல் சென்னையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்.