செயற்கை கருத்தரிப்பு மையங்கள் அரசு மருத்துவக்கல்லுாரிகளில் தேவை
விருதுநகர்: அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரிப்பு மையங்களை அமைத்து தமிழக அரசு குழந்தையின்மை என்ற நிலை போக்க வேண்டுமென குழந்தை இல்லாத தம்பதிகள் எதிர்பார்க்கின்றனர்.தமிழக அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைகள், மாவட்ட தலைமை, தாலுகா அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணிகளுக்கான பரிசோதனைகள், சிகிச்சைகள், பிரசவங்கள் தினசரி நடக்கிறது.ஆனால் கருத்தரிப்பில் உள்ள தடை, அதற்கு தம்பதிகளுக்கு தேவைப்படும் சிகிச்சைகள் அளிக்கவும், குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத தம்பதிகளுக்கு செயற்கை கருத்தரிப்பு மூலமாக குழந்தை பெற்றுக் கொடுக்கும் சிகிச்சைகள் அரசு மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்படவில்லை. இதனால் பலரும் தனியார் செயற்கை கருத்தரிப்பு மையங்களில் பரிசோதனை, சிகிச்சைக்கு ஒரு குழந்தைக்கு ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதில் பிரசவத்திற்கு தனி கட்டணம் வசூலிக்கப்படுகின்றது.கருத்தரிப்பு மையங்களில் இருந்து பிரசவத்திற்காக மட்டும் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.ஒவ்வொரு மாவட்டத்திலும் மாநில அரசின் அனுமதி பெற்ற தனியார் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால் தமிழகத்தில் 36 அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைகள் இருந்தும், அவற்றில் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் ஏற்படுத்தப்படாமல் உள்ளது.ஏழை குடும்பத்தில் குழந்தை இல்லாமல் உள்ள தம்பதிகள் பலர் பரிசோதனை, சிகிச்சை கட்டணம் செலுத்த முடியாமல் பரிதவித்து வருகின்றனர். எனவே அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரிப்பு மையங்களை ஏற்படுத்தி குழந்தையின்மை நிலையை போக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.