85,712 கால்நடைகளுக்கு செயற்கை கருவூட்டல் இணை இயக்குனர் தகவல்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் 2024 மார்ச் முதல் 2025 ஏப்ரல் வரை 85,712 கால்நடைகளுக்கு செயற்கை முறையில் கருவூட்டல் செலுத்தப்பட்டுள்ளதாக கால்நடைத்துறை இணை இயக்குனர் எட்வின் ஜேம்ஸ் ஜெபதாஸ் தெரிவித்தார். மாவட்டத்தில் விருதுநகர், சிவகாசி, அருப்புக்கோட்டை, காரியாபட்டி, ராஜபாளையம், சாத்துார், வெம்பக்கோட்டை, ஸ்ரீவில்லிப்புத்துார், வத்திராயிருப்பு, திருச்சுழி ஆகிய நகர் பகுதிகள், அதனை சுற்றியுள்ள ஊரகப்பகுதிகளில் 2023ம் ஆண்டு நிலவரப்பட்டி 2 லட்சத்து 12 ஆயிரத்து 463 மாடுகள் உள்ளது. இவற்றிற்கு கால்நடை மருத்துவமனைகள், சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம் குடற்புழு நீக்குதல், தடுப்பூசி செலுத்துதல், செயற்கை முறை கருவூட்டல், மலட்டு நீக்க சிகிச்சை, சினை சரிபார்ப்பு, சிறு அறுவை சிகிச்சை, நோய்களை கண்டறிதல், தாது உப்பு கலவை விநியோகம் போன்றவை செய்யப்படுகிறது. மாவட்டத்தில் 2024 மார்ச் முதல் 2025 ஏப்ரல் வரை மொத்தம் 85 ஆயிரத்து 712 கால் நடைகளுக்கு செயற்கை கருவூட்டல் செய்யப் பட்டுள்ளது. கருவூட்டல் செய்யப்பட்ட கால்நடைகள் மருத்துவர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு நல்ல நிலையில் குட்டிகளை ஈன்றுள்ளது. பிரசவித்தலின் போது ஏற்படும் சிக்கலை தடுப்பதற்காக அனைத்து முன் தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக இணை இயக்குனர் எட்வின் ஜேம்ஸ் ஜெபதாஸ் தெரிவித்தார்.