அனுமதி பெறாத கடன் நிறுவனங்கள் அதிகரிப்பு விழிப்புணர்வு அவசியம்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் ஆங்காங்கே பல்வேறுபெயர்களில் அனுமதி பெறாத கடன், நிதி நிறுவனங்கள் முளைத்து வருகின்றன. இவற்றில் பணத்தை வாங்கிய அதிக வட்டி செலுத்தியோ, சேமிப்பு துவங்கியோ மக்கள் ஏமாற வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை செய்தும், ஊரகப்பகுதிகளில் போதிய விழிப்புணர்வு இல்லாததால் மக்கள் ஏமாற்றப்படுகின்றனர்கொரோனாவுக்கு பிறகு நடுத்தர வர்க்கத்தினர் பொருட்கள் வாங்குவது குறைந்து வருவதாக கருத்துக்கள் நிலவுகின்றன. அதே போல் தினக்கூலிகள் வாழ்வாதாரத்திற்கு மட்டுமே உழைக்கும் பணத்தை சேமிக்கும் நிலை உள்ளது. பெரிய அளவில் சேமிப்பு இல்லாததால் அவர்கள் பாதிப்பை சந்திக்கும் சூழல் உள்ளது. இதை பயன்படுத்தி கடன் வழங்குகிறோம் எனும் பெயரில் நிறைய சிறு, குறு நிதி நிறுவனங்கள் புதிது புதிதாக முளைக்க துவங்குகின்றன. குறிப்பாக இவற்றில் பல நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை. இது குறித்து முன்பே மாவட்ட நிர்வாகமும் எச்சரித்துஉள்ளது. இருப்பினும் இவர்கள் கடன் வழங்கி அதிக வட்டி நிர்ணயித்து அடாவடி வசூல் செய்கின்றனர். இது தொடர்கதையாக உள்ளது. புதிய புதிய பெயர்களில் துவங்கப்படும் இந்நிறுவனங்களை பற்றி மக்கள் அறிந்து கொள்ள வழியில்லாத சூழல் உள்ளது. மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்த நிறுவனங்களின் பெயரை வலைத்தளத்தில் வெளியிட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.