680 கிராம் எடையில் பிறந்த குழந்தையை 1.300 கிலோ எடை அதிகரித்து சாதனை
விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 26 வாரங்களில் வெறும் 680 கிராமில் பிறந்த குழந்தைக்கு டாக்டர்கள் தொடர் சிகிச்சை அளித்து 1300 கிராம் எடையாக அதிகரிக்கச் செய்து பெரும் சாதனை படைத்தனர்.விருதுநகர் அருகே வரலொட்டியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரது மனைவி பிரியதர்ஷினி. இவர் கருவுற்றிருந்தார். 26 வாரங்கள் ஆன நிலையில் திடீரென பனிக்குடம் உடைந்து 680 கிராம் எடையுள்ள பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து விருதுநகர் அரசு மருத்தவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பச்சிளங்குழந்தைகள் தீவிர சிகிச்சைப்பிரிவில் குழந்தையை அனுமதித்தனர். டீன் ஜெயசிங் ஆலோசனைப்படி, குழந்தைகள் நலப் பிரிவு துறைத் தலைவர் டாக்டர் சங்கீத் தலைமையிலான டாக்டர்கள், செவிலியர்கள் அடங்கிய குழு மூலம் குழந்தையை கண்காணித்தது. மேலும் குழந்தைக்கு செயற்கை சுவாசம், குழந்தையின் ரத்த ஓட்டம் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டு, குழந்தையின் நுரையீரல் வளர்ச்சிக்கான உயரிய மருந்து, மூளையின் செயல்பாடுகளை காக்ககூடிய உயரிய மருந்துகள், தாய்ப்பால் வங்கி மூலம் பால் வழங்கப்பட்டன. கங்காரு பாதுகாப்பு முறையிலும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் 76 நாட்களில் அக்குழந்தை இரண்டு மடங்கு எடை கூடுதலாகி 1300கிராம் எடை வந்தது. இதையடுத்து தாயிடம் நேரடியாக தாய்ப்பால் குடிக்கும் நிலைக்கு குழந்தை வந்தது. எனவே தாய் சேய் இருவரையும் ஆரோக்கியமான நிலையில் மருத்துவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து மருத்துவக் கல்லுாரி டீன் ஜெயசிங் கூறுகையில், விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அரசுத் திட்டங்களான பாதம் காப்போம், படுக்கைப்புண் சிகிச்சை, போதை மறுவாழ்வு மையம், புற்று நோய் கண்டறியும் மையம், தீவிர தீக்காய சிகிச்சைப்பிரிவு, பச்சிளங்குழந்தை தீவிர சிகிச்சைப்பிரிவு சர்வதேச தரத்தில் செயல்பட்டு வருகிறது.அனைத்து விதமான சிகிச்சைகளும் இலவசமாக நல்ல நிலையில் வழங்கப்படுகிறது. எனவே மக்கள் இதை பயன்படுத்தி நலம்பெற வேண்டும் என்றார்